‘ஏர்செல்’ நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தியதால் திருப்பூர் சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை


‘ஏர்செல்’ நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தியதால் திருப்பூர் சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Feb 2018 3:15 AM IST (Updated: 22 Feb 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஏர்செல் நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தியதால் திருப்பூரில் உள்ள சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு ஏர்செல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த பல நாட்களாக ஏர்செல் நிறுவனத்தின் சேவை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. ஏர்செல் தொலை தொடர்பு சேவைகள் சரிவர கிடைக்காமலே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து அந்த நிறுவனம் தங்கள் சேவையை முற்றிலும் நிறுத்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று மாலைவரை காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. செல்போனில் ஒருவருக்கு தொடர்பு கொண்டால் ‘சுவிட்ச் ஆப்’ அல்லது ‘தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்’ என்ற கணினியின் பதிலே வந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து மொத்த சேவையும் நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ளவும், இணையதள சேவையை பயன்படுத்த முடியாமலும் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

திருப்பூர் தொழில் நகரம் என்பதால் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களும் வங்கி கணக்கு, ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் இந்த எண்ணை இணைத்திருக்கின்றனர். இதனால் தகவல் தொடர்பு, பண பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து கொள்ள நேற்று மதியத்தில் இருந்தே ஏராளமானோர் குமரன் ரோட்டில் உள்ள அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு திரண்டனர். நேரம் செல்ல செல்ல 100–க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து சென்ற வண்ணம் இருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

திடீரென ஏராளமானோர் சேவை மையத்தை முற்றுகையிட்டு, சேவையை சரி செய்து கொடுக்கும்படி அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் எவ்வளவோ எடுத்து குறியும் அதை ஏற்றுக்கொள்ளாத வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களுக்கான பிரச்சினையை சரி செய்து கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியபடியே அங்கு கூடியிருந்தனர். கூட்டத்தை சமாளிக்க இயலாமல் போகவே, ஊழியர்கள் இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில், நாடு முழுவதும் இந்த பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் பிரச்சினை சரி செய்யப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாற வேண்டாம் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஊழியர்களை முற்றுகையிட்டு ‘பிற நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கான ஏற்பாடுகளையாவது செய்து கொடுங்கள்’ என்று கோரிக்கை விடுத்தனர். சிலருக்கு இதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டாலும், பலர் ‘இன்னும் ஓரிரு நாட்கள் வரை காத்திருந்து பார்க்கலாம்’ என்றபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கூடியதால் குமரன் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

Next Story