சேலம்-பெரமனூர் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சேலம்-பெரமனூர் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:00 AM IST (Updated: 22 Feb 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-பெரமனூர் ரோட்டில்ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.சேலம் 4 ரோடு பகுதியில் இருந்து பெரமனூர் செல்லும் மெயின்ரோட்டில் ஓட்டல்கள், மருந்தகங்கள், டீக்கடைகள் என பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன.

சேலம்,

இந்த சாலையில் உள்ள சாக்கடை கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து கடைகள், சிலாப்புகள், படிக்கட்டுகள் கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. மேலும் பெரமனூர் ரோட்டில் உள்ள சிதம்பர விநாயகர் கோவிலை சுற்றிலும் கழிவுநீர் குளம் போல தேங்கியது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சாலையிலும், கோவில் வளாகத்திலும் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பது தொடர்பாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் கண்டறிந்து உடனே அகற்ற அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று காலை அஸ்தம்பட்டி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தன், நெடுஞ்சாலைதுறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் சேலம்-பெரமனூர் ரோட்டில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், இரும்பு கம்பியால் ஆன சிலாப்புகள், படிக்கட்டுகள் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பு இரும்பு கம்பிகள் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. அதிகாரிகள் நடவடிக்கையை பார்த்து சிலர் தானாகவே முன்வந்து, தன்னுடைய கடைகள் மற்றும் சிலாப்புகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையொட்டி பள்ளப்பட்டி போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே அங்கு சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியும் உடனடியாக நடைபெற்றது.

மேலும் அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வில்லை என்றும், சில கடைகளில் இன்னமும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story