ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்


ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 Feb 2018 3:15 AM IST (Updated: 22 Feb 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்குவதற்கான திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தேனி,

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் வசிக்கும் அனைத்து குடும்பத்திற்கும், குன்னூர் வைகை ஆற்றில் தண்ணீர் எடுத்து கூட்டுக்குடிநீர் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத காரணத்தால் குன்னூர் வைகை ஆற்றில் நீர்வரத்து இன்றி காணப்பட்டது.

இதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு ஆண்டிப்பட்டி நகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆற்றில் தண்ணீர் வந்தால் மட்டுமே ஆண்டிப்பட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஆண்டிப்பட்டியில் குடிநீர் பிரச்சினையை தவிர்க்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.

அதன்படி இந்த திட்டத்திற்காக ரூ.14 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது வைகை அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, புதிய குடிநீர் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் வைகை அணையில் இருந்து ஆண்டிப்பட்டி வரையில் ராட்சத குடிநீர் குழாய்களும் பதிக்கப்பட்டு விட்டது. இறுதி கட்ட பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெறும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் எப்போதும் குடிநீர் தட்டுப்பாடு வராது. அதேபோல அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Next Story