ரவுடி பினுவின் எதிரி சேலம் கோர்ட்டில் சரண்


ரவுடி பினுவின் எதிரி சேலம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:15 AM IST (Updated: 22 Feb 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலீசார் தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடி பினுவின் எதிரி ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் கோர்ட்டில் சரணடைந்தார்.

சேலம்,

சென்னையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு உள்ளிட்ட ரவுடி கும்பலை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரவுடி பினுவின் பிரதான எதிரியாக கருதப்படும் பிரபல ரவுடி ராதா என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 35) என்பவரை சென்னையில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு லிங்கம் உத்தரவிட்டார். அதன்பிறகு ரவுடி ராதாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

இதனிடையே, கோர்ட்டில் சரண் அடைந்த ரவுடி ராதா குறித்து சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ராதா. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். நாகேந்திரனுடன் இணைந்து ரவுடி ராதா பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மற்றும் கூட்டாளிகள் மீது 9 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்ப காலக்கட்டத்தில் ரவுடி பினுவும், ராதாவும் ஒன்றாகத்தான் தொழில் செய்து வந்துள்ளனர். பின்னர் அடிதடி, கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு ரவுடி பினுவை காட்டிலும் பெரிய ரவுடியாக அவர் உருவெடுத்து வந்துள்ளார். இது பினுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பினு, ரவுடி ராதாவை எதிரியாக பார்க்கத்தொடங்கினார்.

இந்த நிலையில் ராதாவை தீர்த்துக்கட்டவே ரவுடி பினு, சென்னையில் சக ரவுடிகளை பிறந்தநாள் விழாவுக்கு கூட்டியுள்ளார். இதன்மூலம் தனது பலத்தை காட்டுவது ரவுடி பினுவின் திட்டமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பிரபல ரவுடி ராதா கொலைகளை கொடூரமாக செய்யக்கூடியவர் என்றும், தன்னால் கொலை செய்யப்படும் நபர் எந்த வகையிலும் உயிர் பிழைத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தலைமறைவாக இருந்து வந்த ரவுடி ராதாவை அரும்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். எனினும் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவுவதற்காக, அவர் மொட்டை அடித்துக்கொண்டு மாறுவேடத்தில் பல்வேறு ஊர்களில் பதுங்கியிருந்துள்ார். ஆனால் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், ரவுடி ராதாவை என்கவுன்ட்டரில் சுடுவதற்கு போலீசார் முடிவு செய்திருந்ததாகவும், இதுபற்றி தனது உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட ரவுடி ராதா உயிர் பயத்தில் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்ததாகவும் தெரிகிறது.

Next Story