ஆடம்பரமான ரெயில்
இந்த ரெயிலில் மார்பிள் தரை, குளியல் தொட்டி, மிகப் பெரிய படுக்கைகள், இணைய வசதி போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன.
ஜப்பானில் மிக ஆடம்பரமான ரெயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 2 இரவுகள், 3 பகல்களைக் கொண்ட இந்த ரெயில் சுற்றுப்பயணத்தில் பசுமையான வயல்வெளிகள், கடற்கரைகள், பழங்காலப் புனிதத் தலங்கள் போன்றவற்றைத் தரிசிக்கலாம். 5 நட்சத்திர விடுதிகளைப் போன்று மார்பிள் தரை, குளியல் தொட்டி, மிகப் பெரிய படுக்கைகள், அலங்காரம், குளிர்சாதன வசதி, இணைய வசதி போன்றவை இந்த ரெயிலில் செய்யப்பட்டிருக்கின்றன. புகழ்பெற்ற சமையல் கலைஞர்களால் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் உணவை ருசித்துக்கொண்டே கண்ணாடிகள் வழியே இயற்கை எழிலை ரசிக்கலாம். இரவு உணவுக்குப் பிறகு பியானோ இசையைக் கேட்கலாம். பார் வசதியும் உண்டு. இப்படி 5 நட்சத்திர ஓட்டல்களை மிஞ்சும் வசதிகளைக் கொண்ட இந்த ரெயில் பயணத்திற்கு, 14 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். முன்பதிவு அடுத்த ஆண்டு வரை சென்றுவிட்டது என்றால் பாருங்களேன்..!
2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியைக் கருத்தில் கொண்டு, இந்த ஆடம்பர ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளைக் காண வரும் வெளிநாட்டினரை இந்த ரெயில் அதிகம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story