மனைவி, குழந்தை படுகொலை வியாபாரி தற்கொலை


மனைவி, குழந்தை படுகொலை வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2018 3:00 AM IST (Updated: 23 Feb 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி-குழந்தையை கொலை செய்துவிட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது எம்.கோவில்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா மகன் முத்துபாண்டி(வயது 34). இவருக்கும், அவருடைய மூத்த சகோதரியின் மகளான பிரியாவுக்கும் (26) கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சவுமியநாராயணன் (2) என்ற குழந்தை உண்டு.

திருமணத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்துவந்த முத்துபாண்டி, அதன்பிறகு சிங்கம்புணரியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்தார். இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கும், முத்துபாண்டிக்கும் பழக்கம் இருந்துவந்தது. இதுகுறித்து அறிந்த பிரியா, முத்துபாண்டியிடம் கேட்டதால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்துவைத்தனர். மேலும் கடையில் வேலை பார்த்த பெண்ணை நிறுத்திவிட்டனர்.

அதன்பிறகு முத்துபாண்டி மீண்டும் அந்த பெண்ணை வேலையில் அமர்த்தினார். இதனால் முத்துபாண்டிக்கும், பிரியாவுக்கும் நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துபாண்டி, பிரியாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், தனது குழந்தையையும் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு முத்துபாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு சென்ற முத்துபாண்டி-பிரியாவின் பெற்றோர்கள் மதிய வேளையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் கதவை அவர்கள் தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, முத்துபாண்டி, பிரியா, குழந்தை சவுமியநாராயணன் பிணமாக கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர்.

Next Story