கழிவுபஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து


கழிவுபஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM IST (Updated: 23 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கழிவுபஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

சரவணம்பட்டி,

கோவை காளப்பட்டி அருகே உள்ள என்.ஜி.பி. கல்லூரிக்கு பின்புறம் உள்ள தொழிற்பூங்காவில் வசித்து வருபவர் ஸ்ரீராம். இவர் தனது வீட்டின் அருகே கழிவு பஞ்சு குடோன் அமைத்து அதை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இங்கு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், மாலை 3 மணியளவில் ஸ்ரீராமின் வீட்டிற்கு அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைக்கு சிலர் தீ வைத்துள்ளனர். அப்போது காற்றில் பறந்த தீப்பொறி, எதிர்பாராதவிதமாக குடோனில் இருந்த கழிவுபஞ்சு மூட்டையில் விழுந்தது. அதன்பிறகு சிறிது நேரத்தில் தீப்பிடித்து அங்கிருந்த கழிவு பஞ்சு மூட்டைகளுக்கு தீ பரவி எரியத்தொடங்கியது. இதனால் குடோன் முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவி பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்த தகவலின் பேரில் பீளமேடு, கணபதி, கோவை மத்திய தீயணைப்பு நிலையத்தை 3 வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க தொடங்கினர். கழிவுபஞ்சுகள் மூட்டைகளாக கட்டி, அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் தீயை உடனடியாக அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி னர். இதையடுத்து பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் பஞ்சு மூட்டைகளை அகற்றி, தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையே மேலும் 6 தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேர போராடி தீயை அணைத் தனர். இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 1,500 டன் கழிவுபஞ்சுகள் எரிந்து நாசமாயின. குடோனில் தீப்பற்றி எரிந்த போது தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாநகர கிழக்கு போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். காளப்பட்டி தொழிற்பூங்கா பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story