மாவனல்லா-மசினகுடி நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணி தீவிரம்


மாவனல்லா-மசினகுடி நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Feb 2018 4:00 AM IST (Updated: 23 Feb 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மாவனல்லா-மசினகுடி-தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடை திறப்புடன் தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்வார்கள்.

அவர்கள் பெரும்பாலும் கல்லட்டி-மாவனல்லா சாலை வழியாகவும், கூடலூர்-தெப்பக்காடு சாலை வழியாகவும் வருவார்கள். இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செவ்வாய்க்கிழமை வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேற்கண்ட இரண்டு சாலைகளில் அதிகளவில் வந்து செல்லும். இந்த சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமலும், விரிவுப்படுத்தப்படாததாலும் குறுகிய சாலைகளாக உள்ளன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக இந்த சாலைகள் செல்வதால் சாலையை விரிவுப்படுத்த வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்த இரு நெடுஞ்சாலைகளிலும் தற்காலிகமாக சாலையோரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் போடப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தெப்பக்காடு முதல் மசினகுடி பொக்கா புரம் வரையிலும், மாவனல்லா முதல் மசினகுடி வரையிலும் சாலையின் இருபுறமும் மழைநீர் எளிதில் செல்லும் வகையிலும், வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்லும் வகையிலும் 5 பொக்லைன் எந்திரங்களை கொண்டு ரோடு ரோலர் மூலம் சாலையை சமன் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்த வனத்துறையினர் அனுமதி அளிக்காமல் இருந்து வந்தனர். இதனால் குறுகிய சாலையில் எதிரே வாகனங்களுக்கு வழி விடுவது மிகவும் சிரமமாக இருந்தது.

சில சமயங்களில் குறுகிய சாலையில் செல்வதால் வாகனங்கள் பழுதாகியும் நின்றன. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது இந்த சாலைகள் தற்காலிகமாக இருபுறமும் மண் போட்டு சீரமைப்பு செய்து உள்ளனர்.

Next Story