ரெயில் வரும்போது தண்டவாளத்தில் பழுதாகி நின்ற பள்ளி வேன்


ரெயில் வரும்போது தண்டவாளத்தில் பழுதாகி நின்ற பள்ளி வேன்
x
தினத்தந்தி 23 Feb 2018 5:15 AM IST (Updated: 23 Feb 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, ஆளில்லா ரெயில்வே கேட்டில் பள்ளிக்கூட வேன் பழுதாகி நின்றது. அப்போது ரெயில்பாதையில் வந்த சரக்கு ரெயிலை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.

பழனி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து மதுரை நோக்கி நேற்று காலை சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. காலை 8.55 மணிக்கு அந்த ரெயில் பழனி அருகே உள்ள பொன்னாபுரம் ஆளில்லா ரெயில்வே கேட் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பழனியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட வேன் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆளில்லா ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றது. அந்த வேனில் 10 மாணவ-மாணவிகள் இருந்தனர். அந்த வேனை ஆயக்குடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டினார். அந்த சமயம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேன் திடீரென்று பழுதாகி ரெயில் தண்டவாளம் அருகில் நின்றது. சற்று தூரத்தில் ரெயில் வருவதை பார்த்த மாணவ-மாணவிகள் செய்வதறியாது அலறி கூச்சல் போட்டனர். இதற்கிடையே தண்டவாளத்தின் அருகில் வேன் நிற்பதை ரெயில் டிரைவர் பார்த்தார். உடனே அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். வேனை ஒட்டியவாறு ரெயில் வந்து நின்றது. இதனால் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாக பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் பள்ளிக்கூட வேன் டிரைவரை அவர்கள் தேடினர். ஆனால் ரெயில் தண்டவாளத்தை ஒட்டியவாறு வேன் பழுதாகி நின்றதுமே டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டது தெரியவந்தது. பின்னர் வேனில் இருந்த மாணவ-மாணவிகளை அப்பகுதி மக்கள் கீழே இறக்கிவிட்டனர். மாணவ- மாணவிகள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினர்.

அதன்பிறகு, பழுதாகி நின்ற வேனை அங்கிருந்து இருந்து அகற்றினர். இதுகுறித்து பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாற்று வேன் கொண்டுவரப்பட்டது. அதில் மாணவ-மாணவிகளை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே சம்பம் நடந்த சில நிமிடங்களுக்கு பிறகு சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

சரக்கு ரெயில் திண்டுக்கல் நோக்கி சென்ற போது பொன்னாபுரம் ஆளில்லா ரெயில்வே கேட்டில் பணியில் இருக்க வேண்டிய தற்காலிக ஊழியர் அங்கு இல்லை. அதனாலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் மேல்நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story