அரசியல்வாதிகள் கடவுளும் இல்லை, சட்டத்துக்கு மேலானவர்களும் இல்லை


அரசியல்வாதிகள் கடவுளும் இல்லை, சட்டத்துக்கு மேலானவர்களும் இல்லை
x
தினத்தந்தி 23 Feb 2018 4:32 AM IST (Updated: 23 Feb 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

மாங்குரோவ் காடு அழிப்பு தொடர்பான வழக்கில் அரசியல் தலைவர்கள் கடவுளும் இல்லை, சட்டத்திற்கு மேலானவர்களும் இல்லை என்று கூறிய ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.

மும்பை,

பா.ஜனதாவை சேர்ந்த கவுன்சிலர் பரசுராம் மாத்ரே மற்றும் சிவசேனாவை சேர்ந்த கவுன்சிலர் அனிதா பாட்டீல் இருவரும் மாங்குரோவ் காடுகளை அழித்து சொகுசு வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடம் கட்டியதாக தெரியவந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மிரா ரோடு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில் புகார்தாரர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் பாரதி தான்குரே அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

அரசியல் தலைவர்கள் ஒன்றும் சட்டத்திற்கு மேலானவர்களும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்கள் சட்ட விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டியவர்கள். எதற்காக மாநகராட்சியும், போலீசாரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறீர்கள்? நீங்கள் வெளிப்படையாக நடக்கவேண்டும், யாருக்கும் பணிந்து போகவேண்டிய அவசியம் இல்லை.

அரசியல் ஆதாயத்தை அனுபவித்து வரும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். ஒரு வாரத்திற்குள் கவுன்சிலர்கள் பரசுராம் மாத்ரே மற்றும் அனிதா பாட்டீல் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறினர். 

Next Story