மோட்டார் சைக்கிள்களை போலீசார் மறிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி


மோட்டார் சைக்கிள்களை போலீசார் மறிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 23 Feb 2018 5:27 AM IST (Updated: 23 Feb 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நடுரோட்டில் மோட்டார் சைக்கிள்களை போலீசார் மறிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப் படுகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்ற செயல்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியிலும் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக போலீசார் முக்கிய சாலைகள், போக்குவரத்து சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்கின்றனர். சோதனை செய்யும் போது போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களையோ, அல்லது தலைகவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய அபராதத்தை போலீசார் விதித்து வருகின்றனர்.

வாகன சோதனையில் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளையும் போலீசார் கண்டறிந்து வருகின்றனர். இது குற்றவாளிகள், சட்டத்திட்டங்களை மீறுபவர்களுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்தினாலும், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான போலீசார் போக்குவரத்து சிக்னல் அருகிலும், பிரதான ரோடுகளில் விரைவாக செல்லும் வாகனங்களை நடு ரோட்டில் நின்று வழிமறித்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பாக இது அமைவதால் ரோட்டோரங்களில் நின்று பாதுகாப்பான முறையில் வாகன சோதனை நடத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:-

மாநகருக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணி, வாகன சோதனை பணிகளை செய்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று தான். இதனால் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இது இருப்பதால் அனைத்து தரப்பினரும் இதை வரவேற்கின்றனர். ஆனால் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் போக்குவரத்து சிக்னல் அருகிலோ அல்லது மெயின் ரோட்டில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது, மறைந்து நிற்கும் போலீசார் திடீரென நடுரோட்டில் வந்து நின்று வாகனங்கள வழிமறிக்கின்றனர். போலீசாரை பார்த்ததும் பயத்தில் வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர்.

அப்போது பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விடுகின்றன. சில வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் ஏற்படுகிறது. குடும்பத்துடன் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் பலர் போலீசாரின் செயலை கண்டு வசைபாடிய படி செல்லும் சம்பவங்களும் தினந்தோறும் நடக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் போலீசாருக்கும் சில நேரங்களில் இது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நடுரோட்டில் நின்று வேகமாக வரும் 4 சக்கர வாகனத்தை நிறுத்தும் போது நிலை தடுமாறி போலீசார் மீது மோதுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. போலீசாரின் வாகன சோதனை பணி பாராட்டத்தக்கது என்றாலும் அது வாகன ஓட்டிகளையும், பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் வாகன சோதனை நடத்துவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story