இளமையான குடும்பம்..!
‘தி பேமலி ஆப் தி புரோஸன் ஏஜ்’ என்று தைவான் மீடியாக்கள் இந்தக் குடும்பத்தை அழைக்கின்றன.
தைவானைச் சேர்ந்த லூர் சூ சகோதரிகளும் இவர்களது அம்மாவும் மிகவும் இளமையாகக் காட்சியளிக்கிறார்கள். லூர் சூவிற்கு 41 வயது. அவரது தங்கைக்கு 40 வயது. இவர்களது கடைசி தங்கை ஷரோனிற்கு 36 வயது. ஆனால் இவர்கள் மூவருமே டீன்-ஏஜ் மாணவிகளை போன்று காட்சியளிக்கிறார்கள். ஓய்வு பெற்ற நடன ஆசிரியரான இவர்களது அம்மாவுக்கு 63 வயதாகிறது. அவர் 30 வயது பெண்ணைப் போலிருக்கிறார்! அதனால் இந்தக் குடும்பத்தை ‘தி பேமலி ஆப் தி புரோஸன் ஏஜ்’ என்று தைவான் மீடியாக்கள் அழைக்கின்றன.
“என் அப்பா கூட 74 வயது தோற்றத்தில் இருக்க மாட்டார். ஆனால் அவர் புகைப்படம் எடுக்க எங்களை அனுமதிப்பதில்லை. அதனால் நாங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறோம். எங்கள் இளமைக்குப் பிரத்யேகமான விஷயங்களைக் கடைப்பிடிப்பதில்லை. இரவு 9 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவோம். அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவோம். ஒருநாளும் காலை உணவைச் சாப்பிடாமல் இருந்ததில்லை. மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுகிறோம். நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்காது.
அதிகாலை ஒரு பெரிய தம்ளர் நிறைய வெதுவெதுப்பான நீரைப் பருகுகிறோம். தண்ணீர் அதிகம் பருகினால் உடல் நீர்ச்சத்தை இழக்காது. இனிப்பு, கரியமில வாயு கலந்த குளிர்பானங்களைக் குடிப்பதில்லை. காலையில் பால் கலக்காத காபி மட்டும் குடிப்போம். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இளமையும் ஆயுளும் அதிகரிக்கும்” என்கிறார் லூர் சூ.இன்ஸ்டா கிராமில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில் 3 லட்சத்து 41 ஆயிரம் பேரும் இவர்களைப் பின்தொடர்கிறார்கள்.
Related Tags :
Next Story