6 அமைச்சர்களை தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்: டி.டி.வி. தினகரன் பேட்டி


6 அமைச்சர்களை தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்: டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2018 5:00 AM IST (Updated: 24 Feb 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட 6 அமைச்சர்களை தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என்று, மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

அவனியாபுரம்,

மதுரை விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் தீர்ப்பு வந்தவுடன் அ.தி.மு.க.வின் நிலை தெரியவரும். அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள், பங்காளிகள் தான். நாங்கள் யாரையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. அவர்களுக்கு சரியான இடம் இது தான் என்பது தெரியும். அதனால் தான், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவரது மனநிலையிலேயே மற்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். குறிப்பிட்ட 6 அமைச்சர்களைத் தவிர, எங்கள் பக்கம் வேறு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். அந்த 6 பேரையும் கட்சியில் இணைப்பது பற்றி தொண்டர்களும் பொதுச்செயலாளரும் தான் முடிவு செய்ய வேண்டும்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு கோமாளி. என்னை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போசை காரில் ஏற்றி வந்து, தங்களுடன் இருப்பதாக கூறியவர் அவர். உதயகுமார் அமைச்சர் என்பதால் உங்களுக்கு பெரிய நபராக தெரியும். பதவி இருக்கும் வரை மட்டுமே அவர் பெரிய நபர். பதவி போன பிறகு அவரது சொந்த தொகுதியான திருமங்கலத்திற்குள்ளேயே அவரால் போக முடியாது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது பற்றி ஒன்றும் இல்லை. ஆனால் நான் பேசியதை தவறாக கூறினார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்புக்கு பின் தனிக்கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story