தாராபுரத்தில் போலீஸ் போல் நடித்து முதியவரிடம் பணம் பறிப்பு


தாராபுரத்தில் போலீஸ் போல் நடித்து முதியவரிடம் பணம் பறிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2018 3:00 AM IST (Updated: 24 Feb 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் முதியவரிடம் போலீஸ் போல் நடித்து பணத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர் அம்மாசை (வயது 67). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் நேற்று தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பஸ்சில் ஏறி தாரா புரம் வந்துள்ளார்.

தாராபுரம் பஸ் நிலையம் வந்து இறங்கியதும், அங்கிருந்து ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர், அம்மாசையிடம் “ தன்னை போலீஸ் காரர் என்று அறிமுகம் செய்து கொண்டு, நீ என்ன கஞ்சா விற்கிறாயா? என்று அவரை மிரட்டியதோடு அவருடைய உடம்பை தடவி சோதனை செய்வது போல் நடித்துள்ளார்.

அப்போது அம்மாசையின் சட்டைப்பையில் இருந்த ரூ.2 ஆயிரத்து 100-ஐ அந்த ஆசாமி எடுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாசை பணத்தை ஏன் எடுத்தீர்கள், பணத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து ஆசாமி ரூ. 100 மட்டும் திருப்பி கொடுத்து விட்டு, ரூ.2 ஆயிரத்தை போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள் என்று சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசாரிடம் அம்மாசை நடந்த விபரத்தை கூறினார். அம்மாசை கூறிய அங்க அடையாளங்களை வைத்து, போலீசார் அந்த ஆசாமியை தேடினார்கள். ஆனாலும் அந்த ஆசாமியை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தாராபுரத்தில் முதியவரிடம் போலீஸ் போல் நடித்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story