கவனிக்க உறவினர்கள் இல்லாததால் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டிகள்


கவனிக்க உறவினர்கள் இல்லாததால் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டிகள்
x
தினத்தந்தி 24 Feb 2018 3:45 AM IST (Updated: 24 Feb 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கவனிக்க உறவினர்கள் இல்லாததால் வார்டில் இருந்து 2 மூதாட்டிகள் வெளியேற்றப்பட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படி சிகிச்சைக்கு வரும் வயதானவர்களை உறவினர்களே ஆஸ்பத்திரியில் தனியாக விட்டுச்செல்லும் அவலம் தொடர் கதையாகி வருகிறது.

அவ்வாறு குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, உடனிருந்து கவனிக்க ஆள் இல்லாத வயதான நோயாளிகளை ஆஸ்பத்திரி ஊழியர்களே வார்டில் இருந்து தூக்கிச்சென்று ஆஸ்பத்திரி வளாகத்தில் மரத்தடியில் விட்டுச் சென்று விடுகின்றனர். பின்னர் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு, உணவு கிடைக்காமலும் இறந்து விடுகின்றனர். பின்னர் ஐகிரவுண்டு போலீசார், பிணத்தை கைப்பற்றி உறவினர்களை கண்டுபிடித்து ஒப்படைக்க சிரமப்படுகின்றனர். இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றும் 2 மூதாட்டிகள் கவனிக்க உறவினர்கள் இல்லாமல் இருந்ததால் அவர்களை ஊழியர்கள் வார்டில் இருந்து வெளியேற்றிய அவலம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த மரியபுஷ்பம் (வயது 70) கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலையோரம் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை கவனிக்க ஆள் இல்லாததால் நேற்று ஊழியர்கள் மரியபுஷ்பத்தை வார்டில் இருந்து வெளியேற்றினர். ஆனால் செல்ல மறுத்து படிக்கட்டு அருகில் அமர்ந்திருந்தார்.

இதேபோல் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமி (70) காயம் அடைந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் வார்டில் உறவினர்களால் கொண்டு வந்து விடப்பட்டார். ஆனால் அவரை வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்காததால் வார்டுக்கு வெளியே பரிதாபமாக கிடந்தார். இதுபோன்று கவனிக்க ஆள் இல்லாமல் வரும் முதியோர்களை பராமரித்து, சிகிச்சை அளிக்க அரசு கருணை உள்ளத்தோடு தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையே, இதுபற்றி தகவல் அறிந்த ஆஸ்பத்திரி டீன் கண்ணன் உடனடியாக 2 மூதாட்டிகளையும் வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று பிற்பகலில் 2 பேரும் 127-வது வார்டில் சேர்க்கப்பட்டு, படுக்கை வசதி அளித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story