தினகரன் அணியினரின் பதாகை வைக்க போலீசார் அனுமதி மறுப்பு


தினகரன் அணியினரின் பதாகை வைக்க போலீசார் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 24 Feb 2018 4:00 AM IST (Updated: 24 Feb 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

கரூர் சுக்காலியூர் ரவுண்டானாவில் தினகரன் அணியினரின் பதாகை வைக்க போலீசார் அனுமதி மறுத்ததால் ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

முன்னாள் முதல்- அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூரில் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் அணியினர் பதாகைகள் ஆங்காங்கே வைத்துள்ளனர். இந்த நிலையில் சுக்காலியூர் ரவுண்டானாவில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த பதாகை நேற்று சரிந்து விழுந்து கிடந்தது. இதையடுத்து நேற்று காலை அந்த பதாகையை அதே இடத்தில் வைக்கும் பணியில் தினகரன் அணியினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பசுபதிபாளையம் போலீசார், பதாகையை வைக்க அனுமதி மறுத்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்றனர்.

இந்த நிலையில் பதாகை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் டி.டி.வி.தினகரன் மற்றும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் சுக்காலியூர் ரவுண்டானா அருகே திரண்டனர். பதாகை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைதொடர்ந்து பதாகை வைக்க போலீசார் அனுமதி அளித்தனர். அதன்பின் அந்த இடத்தில் வாழ்த்து பதாகையை ஆதரவாளர்கள் வைத்தனர். இதைதொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story