வீடு புகுந்து திருடமுயன்ற வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி


வீடு புகுந்து திருடமுயன்ற வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி
x
தினத்தந்தி 24 Feb 2018 4:00 AM IST (Updated: 24 Feb 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். மேலும் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கி, இங்குள்ள தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் சிலர் இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதையும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பகல் நேரங்களில் வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓசூர் காமராஜ் நகர் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தது. மேலும் அவர்கள் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை திருட முயன்றனர். அப்போது பாத்திரம் விழும் சத்தம் கேட்டுள்ளது.

இந்த சத்தம் கேட்டு எழுந்த வீட்டு உரிமையாளர் திருடர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.

பிடிபட்ட வாலிபரை அப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சச்சு (வயது 23) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய 4 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அவருடைய நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சச்சுவை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இவர்கள் 5 பேரும் ஓசூரில் ஏதாவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஓசூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story