‘விவசாயிகளுக்கு கடன் வழங்காத கூட்டுறவு சங்கத்தை பூட்டி சீல் வையுங்கள்’


‘விவசாயிகளுக்கு கடன் வழங்காத கூட்டுறவு சங்கத்தை பூட்டி சீல் வையுங்கள்’
x
தினத்தந்தி 24 Feb 2018 4:00 AM IST (Updated: 24 Feb 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்காத கூட்டுறவு சங்கத்தை பூட்டி சீல் வையுங்கள் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உதுமான் முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது ‘ஆலங்குடி மகாஜனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகேஸ்வரி என்ற பெண் விவசாயி பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு அந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கடன் வழங்க மறுத்து விட்டார். எம்.பி. மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆகியோர் சிபாரிசு செய்தும் கடன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசின் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மகேஸ்வரிக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடனே வழங்காமல் அதனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது எப்படி? பணத்தை மோசடி செய்த கூட்டுறவு சங்க தலைவர் மீது போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றார்.

இதற்கு பதில் அளித்த கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவரை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது, என்றார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தாமதம் இன்றி பயிர் கடன் வழங்குவதற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அதிகாரியும், இணை பதிவாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல கூட்டங்களில் கூறி இருக்கிறேன். ஆனால் ஒரு கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பம் செய்த விவசாயிக்கு கடனே வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. பயிர் கடன் வழங்க முடியாத கூட்டுறவு சங்கம் இயங்கி என்ன பயன்? சர்வாதிகாரமாக அதன் தலைவரை இயங்க விடலாமா? இன்னும் ஒரு வாரத்தில் அந்த கூட்டுறவு சங்கத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க வேண்டும். இல்லை என்றால் அந்த கூட்டுறவு சங்கத்தை பூட்டி சீல் வையுங்கள். இது சம்பந்தமாக சட்டரீதியாக என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கலெக்டர் இப்படி பேசியதும் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் கைதட்டி வரவேற்றனர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், பெருவளை, புள்ளம்பாடி வாய்க்கால்களில் பாலம் கட்டப்பட்டு வருவதால் தாமதமாகத்தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தற்போது இந்த வாய்க்கால்களின் கடைமடை பகுதிகளில் நடப்பட்ட சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் கருகும் நிலையில் உள்ளது. இந்த பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். வரத்து கால்வாய்கள், ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும், குலை நோயால் தாக்கப்படும் ஆந்திரா பொன்னி நெல் விதை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், என்றார். தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன், திருச்சி மாவட்டத்தில் வாய்க்கால் பாசனத்தின் மூலம் பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு, வெற்றிலை ஆகிய பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து குறைந்த பட்சம் 2 ஆயிரம் கன அடி தண்ணீராவது திறந்து விட மாவட்ட நிர்வாகம் முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும், என்றார்.

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும், காவிரி கொள்ளிடம் ஆறுகளில் திருச்சி -கரூர், திருச்சி -சேலம் சாலைகளை வண்ணத்துப்பூச்சி பூங்காவுடன் இணைக்கும் வகையில் பாலங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் அயிலை சிவசூரியன் பேசினார்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் துணை செயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன் பேசும்போது, பழைய கட்டளை மேட்டு வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரி அதன் ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வீரசேகரன், மாவட்ட கலெக்டர் முதல்-அமைச்சரின் தலைமையில் நடைபெற உள்ள கலெக்டர்கள் மாநாட்டில் காவிரி நீர் பங்கீட்டில் குடிநீர் தேவையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வலியுறுத்த வேண்டும், என்றார்.

மேலும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை, மணப்பாறை தாலுகா மானாவாரி இறவை பாசனதாரர்கள் விவசாயிகள் சங்க தலைவர் அப்துல்லா உள்ளிட்ட பல விவசாய சங்க தலைவர்களும் பேசினார்கள்.

Next Story