மீனவர்கள் மீது மத்திய போலீசார் தாக்குதல் போலீஸ் நிலையம் முற்றுகை


மீனவர்கள் மீது மத்திய போலீசார் தாக்குதல் போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 24 Feb 2018 4:00 AM IST (Updated: 24 Feb 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னை துறைமுகம் அருகே மீனவர்கள் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் அவர்களின் பைபர் படகு சேதம் அடைந்தது. இதை கண்டித்து மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ராயபுரம்,

திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களான பிரகாஷ் (வயது 35), இளங்கோ (32), சிவனடி(38), சுரேஷ் (33) ஆகிய 4 பேரும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்து விட்டு நேற்று காலை 8 மணி அளவில் அவர்கள் கரை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

சென்னை துறைமுகம் அருகே வந்தபோது, கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், மீனவர்கள் வந்த பைபர் படகு மீது ரோந்து கப்பலை மோதினர். இதில் படகு லேசாக சேதம் அடைந்தது.

இதனால் படகில் இருந்த மீனவர்கள் 4 பேரும் நிலைதடுமாறி கடலில் விழுந்தனர். பின்னர் நீந்தி படகில் ஏறிய அவர்களை, மத்திய பாதுகாப்பு படை போலீசார் தடியால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிய மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் வந்து நடந்த சம்பவத்தை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த ஏராளமான மீனவர்கள், மத்திய போலீசாரால் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து மீனவர்களை தாக்கியதுடன், அவர்களின் பைபர் படகை சேதப்படுத்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் மனு அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story