சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 24 Feb 2018 4:45 AM IST (Updated: 24 Feb 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் நகராட்சி அலுவலகம் அருகே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் முத்துரங்கம் முதலி சாலை மிகவும் முக்கியமான சாலையாகும். இந்த சாலையில்தான் தாம்பரம் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. தாம்பரம் மார்க்கெட் பகுதி, பஸ் நிலையம், ரெயில் நிலையத்துக்கு செல்லும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள், தினமும் இந்த சாலையை பயன்படுத்திதான் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. தாம்பரம் நகராட்சி அலுவலகம் எதிரில் பூக்கடைகள் சாலை வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், கடையின் முன்பு சாலையின் பாதி பகுதியை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இதன்காரணமாக சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் சில நேரங்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபோல சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்களை பொதுமக்கள் தட்டிக்கேட்டால், அவர்களை கடைக்காரர்கள் மிரட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் தினமும் கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாய்த்தகராறுகள் நடைபெற்று வருகிறது. தாம்பரம் நகராட்சி எதிரில் பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதை பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அணிவகுத்து உள்ளன.

எனவே நகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களும், நகராட்சி அதிகாரிகளும் இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தாம்பரம் நகராட்சி அலுவலகம் எதிரிலேயே இத்தனை போக்குவரத்து பாதிப்பு பிரச்சினை இருந்தும் நகராட்சி நிர்வாகமோ, தாம்பரம் போலீசாரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் தள்ளுவண்டிகள், ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை இன்னும் அதிகப்படுத்தி வருகிறது.

தாம்பரம் நகராட்சியில் இதுபோல முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடிக்கடி அகற்றும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நடைபெறும்போது சாலைகளின் அகலம் அதிகமாவதையும், அதன்பிறகு சில நாட்களில் மீண்டும் அரசியல் கட்சியினர் துணையோடு ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதும் வழக்கமாக இருக்கும்.

ஆனால் கடந்த 6 மாதத்துக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பொதுமக்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், “ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் போதிய பாதுகாப்பு தருவதில்லை” என போலீசார் மீது குற்றம்சாட்டுகின்றனர். போலீசாரிடம் கேட்டால், “நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதுகாப்பு கேட்டால் உரிய முறையில் அளிக்கப்படும்” என தெரிவிக்கின்றனர்.

இதுபோல இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வருவதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனையாக உள்ளது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் நகராட்சி நிர்வாகமும், தாம்பரம் போலீசாரும் இணைந்து தொடர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இணைந்த கைகளாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story