குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் திடீர் போராட்டம்


குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2018 4:49 AM IST (Updated: 24 Feb 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு புதிய கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, மீன்வளத்துறை இணை இயக்குனர் லேமக் ஜெயகுமார், உதவி இயக்குனர் நடராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் மீனவ பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்டன. அதன் பிறகு கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் பேசியபோது கூறியதாவது:-

கொட்டாரத்தில் துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதே நேரத்தில் துறைமுக எதிர்ப்பு கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை சரியான முறையில் தேடாததால் அவர்கள் 6 நாட்கள் வரை கடலில் தத்தளித்து இறந்துள்ளனர். மீட்பு பணிகளை கேரளாவில் செய்தது போல குமரி மாவட்டத்தில் ஏன்? செய்யவில்லை. மீனவர்களை மீட்க இந்திய கப்பல் படையும், கடலோர காவல் படையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாதம் தோறும் நடக்கிறது. ஆனால் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாதம் தோறும் நடப்பது இல்லை. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஒகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இன்னும் நிவாரண நிதி வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மத்திய அரசு தருவதாக அறிவித்த ரூ.2 லட்சமும் இதுவரை வழங்கப்படவில்லை.

ஒகி புயல் மீட்புபணியில் தொய்வு ஏற்பட்டதால் தான் மீனவர்களை மீட்க முடியவில்லை. எனவே இனி இதுபோன்ற இயற்கை பேரிடரில் சிக்கும் மீனவர்களை மீட்பதற்காக மீனவர் சமுதாயத்தை கொண்டு மீட்பு படை ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த படை மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைமுக ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரே இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்ததால் 2 பேருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஒகி புயல் வீசிய அன்றைய தினத்தை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதன் மூலம் 286 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டது. மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் தான் நடக்கவில்லை. எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீனவ மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதிக்காக விண்ணப்பித்தவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரண நிதி ரூ.20 லட்சம் முழுமையாக வழங்கப்பட்டு இருக்கின்றது. காணாமல் போன மீனவர்களின் பெயர் விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அரசாணை வந்ததும் நிவாரண நிதி வழங்கப்படும். மத்திய அரசு தருவதாக அறிவித்த நிவாரண நிதிக்காக புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்பி உள்ளோம். மீட்பு படை அமைப்பது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இந்த நிலையில் அனைத்து மீனவ பிரதிநிதிகளும் எழுந்து நின்று, மீனவர்கள் வேண்டாம் என்று கூறும் துறைமுகத்தை அரசு திணிக்க நினைக்கிறது. துறைமுகம் அமைந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டாலும் மறுக்கப்படுகிறது என்று கூறியதோடு திடீரென துறைமுகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

மேலும் துறைமுகத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த அட்டைகளையும் கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கூறியபோது, ‘நான் குமரி மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக வந்துள்ளேன். துறைமுகத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பேன்‘ என்றார்.

பின்னர் மீனவ பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் நாஞ்சில் கூட்டரங்கு முன் தரையில் அமர்ந்தும், நின்றபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அனைவரும் கலைந்துச்சென்றனர்.

Next Story