குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மேலும் ஒரு பெண்ணை சுற்றி வளைத்த பொதுமக்கள்


குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மேலும் ஒரு பெண்ணை சுற்றி வளைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 Feb 2018 12:30 AM GMT (Updated: 23 Feb 2018 11:24 PM GMT)

குளச்சலில் குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மேலும் ஒரு பெண்ணை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். அப்போது மீட்க வந்த போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் வீட்டு ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குழந்தைகளை கடத்தும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகள் மேலும் பீதியை உண்டாக்கியுள்ளது.

இதனால் ஊருக்குள் சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்து வருகிறார்கள். குளச்சல், சைமன்காலனி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கையில் சாக்கு மூடையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் குழந்தைகளை கடத்த வந்த கும்பலை சேர்ந்தவர் என கருதிய பொதுமக்கள், அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபோல் மணக்குடி, குழித்துறை போன்ற பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து பொதுமக்கள் தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.

இந்தநிலையில் குளச்சல் கோடிமுனை பகுதியில் நேற்று காலையில் 50 வயதுடைய வடமாநில பெண் ஒருவர் சுற்றி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவர் குழந்தைகளை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதற்கிடையே, அந்த பெண் பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் துரத்தி சென்றனர். அப்போது, அவர் கீழே விழுந்து காயமடைந்தார். தொடர்ந்து பொதுமக்கள் அந்த பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டு குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணை மீட்டனர். தொடர்ந்து அவரது உடலில் காயம் இருந்ததால், 108 ஆம்புலன்சை வரவழைத்து அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றினர்.

ஆனால், ஆம்புலன்சை அங்கிருந்து புறப்பட விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். எங்கள் பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதும், சந்தேக நபர்கள் சுற்றி திரிவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே, குழந்தைகளை கடத்தும் கும்பல் தொடர்பாக எங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து ஆம்புலன்சை மீட்டு கொண்டு சென்றனர். பொதுமக்களிடம் சிக்கிய பெண் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குளச்சலில், குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மேலும் ஒரு பெண்ணை பொதுமக்கள் சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே மேலும் ஒரு வீட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியது. குளச்சல் மெயின்ரோடு, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது வீட்டில் குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டின் மேல்மாடியில் 2 ஜன்னல்களில் 4 கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. நேற்று காலையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை கண்டு பால்ராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஏற்கனவே, குமரி மாவட்டத்தில் பல வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. தற்போது, ஒட்டப்பட்டுள்ள கருப்பு ஸ்டிக்கரும் அதே பாணியில் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story