‘குப்பை குறையும், எரிபொருளும் கிடைக்கும்!’


‘குப்பை குறையும், எரிபொருளும் கிடைக்கும்!’
x
தினத்தந்தி 24 Feb 2018 1:05 PM IST (Updated: 24 Feb 2018 1:05 PM IST)
t-max-icont-min-icon

“எங்கள் சாதனத்தின் மூலம், குவிந்துவரும் குப்பைகளைக் குறைக்கலாம், பல்வேறு பயன்பாடுகளுக்கான எரிபொருளும் கிடைக்கும்” என்கிறார்கள், அஜீத்குமரன், விஸ்வநாதன்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவர் களான இவர்கள், தாங்கள் உருவாக்கியுள்ள புதுமை சாதனம் பற்றிக் கூறுகிறார்கள்...

குப்பையில் இருந்து எரிபொருள்

“நாங்கள் இருவரும் பி.டெக். கெமிக்கல் என்ஜினீயரிங் பயின்றுவருகிறோம். நிறைவாண்டு புராஜெக்டாக நாங்கள் உருவாக்கியதுதான், குப்பையில் இருந்து மீத்தேன் வாயுவை உருவாக்கும் சாதனம். மிகவும் எளிமையாக, அதிகச் செலவின்றி இந்தச் சாதனத்தை உருவாக்கியுள்ளோம்.

இன்று உலகின் பெரும் பிரச்சினையாக மாறியிருப்பது, மலை மலையாய் குவிந்துவரும் குப்பைகள். கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள், பெருநகரப் பகுதிகள் என்று எந்த வித்தியாசமும் இன்றி எங்கும் குப்பைகள் குவிந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை மேலாண்மை செய்வது, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

மேலும் இந்த குப்பை மலைகளால், அருகில் வசிக்கும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பெரும் சுகாதாரக் கேடும், சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுகின்றன. குப்பைக்கழிவுகள் நீர்நிலைகளைப் பாழாக்குகின்றன, அவை எரிக்கப்படும்போது காற்று மண்டலத்தை மாசுபடுத்துகின்றன.

இந்த குப்பை பிரச்சினைக்கு ‘குட்பை’ சொல்லும் விதமாகவும், அதன் மூலம் கூடுதல் பலன் பெறும் வகையிலும் புதிய சாதனத்தை உருவாக்கியிருக் கிறோம். இப்போதைக்கு, மக்கும் குப்பைகளை மட்டுமே எங்கள் சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

மீத்தேனை பெறலாம்

தற்போது, நிலத்தடியில் இருந்து மீத்தேன் எரிவாயுவை எடுப்பதற்கு பெரும் பொருட்செலவு, மாபெரும் உபகரணங்களுடன் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கேள்விகளும் எழுகின்றன. ஆனால் எங்கள் சாதனத்தின் மூலம் எளிதாக மீத்தேனை பெறலாம்.

மேலும், இந்தச் சாதனத்தை இயக்குவதற்கான மின்சாரத்தையும் நாங்கள் சூரியசக்தித் தகடுகள் மூலமே பெறுகிறோம். எனவே எங்கள் சாதனம் முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

எங்கள் சாதனத்தில், ஆக்சிஜன் இல்லாமல் குப்பைகளை எரிக்கும் ஒரு கொள்கலன் உள்ளது. அதில், டி.சி. மின்சாரத்தில் இயங்கும் ஒரு வெப்பமூட்டும் கருவி இருக்கிறது. அக்கருவி இயங்கி, குப்பைகளை எரிக்கும்.

அப்போது, அந்தக் குப்பையில் இருந்து முதலில் கார்பன்-டை- ஆக்சைடு உருவாகும். அதை வெளியே விட்டுவிட்டு, பின்னர் உருவாகும் மீத்தேனை எரிவாயு உருளைகளில் சேகரிக்கலாம்.

பல்வேறு பயன்பாடுகள்

இம்முறையில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை, சேமித்துவைத்துப் பயன்படுத்தலாம். சமையல் அடுப்பு, மோட்டார் இயக்கம் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு அதை உபயோகிக்கலாம். தற்போது எங்கள் சாதனத்தில் ஒரு முறையில் சுமார் 4 கிலோ குப்பைகளைப் பயன்படுத்தலாம்.

எங்கள் சாதனத்துக்கு ஆரம்பத்தில், பொதுவாகக் கிடைக்கும் மின்சாரத்தைத்தான் பயன்படுத்தினோம். ஆனால், சுயசார்பும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மையும் இருக்க வேண்டும் என்று எண்ணியதால், ‘சோலார் பேனல்’ எனப்படும் சூரியசக்தித் தகடுகளின் மூலம் தேவையான மின்சாரத்தை நாங்களே உற்பத்தி செய்துகொண்டோம். சுமார் கால் மணி நேரத்தில் இச்சாதனத்தில் வாயு உற்பத்தியாகத் தொடங்கிவிடும்.

கஷ்டத்தைத் தாண்டி...

நாங்கள் சுமார் 15 நாட்களில் இச்சாதனத்தை உருவாக்கி முடித்தோம். இதில், ஆக்சிஜன் அற்ற நிலையில் குப்பைகளை எரிக்கும் கொள்கலனை உருவாக்குவதுதான் மிகவும் கஷ்டமாக இருந்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்து, அதைத் தயாரித்தோம். மொத்தத்தில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவில் இச்சாதனத்தை உருவாக்கிவிட்டோம்.

இயற்கை முறையில் எடுக்கப்படும் மீத்தேனை விட, 47 சதவீதம் அதிகமாக எங்கள் சாதனத்தின் மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எரியூட்டப்பட்ட குப்பையை உரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே வீண்கழிவு என்பதே கிடையாது.

ஒரே கல்லில் இரு மாங்காய்

எங்கள் சாதனத்தை பெரிய அளவிலும், அதிக எண்ணிக்கையிலும் தயாரித்து உபயோகிப்பதன் மூலம், குப்பைக்கழிவுப் பிரச்சினைக்கு குறிப்பிடத்தக்க அளவு தீர்வு காணலாம். மறுபுறம், அதிகரித்துவரும் எரிபொருள் தேவைக்கும் கைகொடுக் கலாம்.

உறுதுணையாக இருந்தவர்கள்

எங்கள் யோசனை, திட்டத்துக்கு நிஜத்தில் உருக்கொடுப்பதற்கு தரங்கம்பாடி ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷனும், அதன் நிறுவனர்களில் ஒருவரான முரளியும் மிகவும் உதவி செய்தனர்.

உதவிப் பேராசிரியர் விமல்குமார் உள்ளிட்ட எங்கள் துறை ஆசிரியர்களும் மற்றவர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் எங்களுக்கு இருந்தது.

சாதனத்தின் செயல்பாட்டையும், அதன் பயனையும் அறிந்த பலதரப்பினரும் எங்களைப் பாராட்டி வருகின்றனர்.

நாங்கள் அறிந்தவரை இதுவரை இம்மாதிரியான சாதனத்தை யாரும் உருவாக்கவில்லை. எனவே எங்களின் சாதனத்துக்குக் காப்புரிமை பெறும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறோம். அடுத்தகட்டமாக, மக்காத குப்பைகளையும் இதுபோன்ற முறையில் பயன்படுத்த முடியுமா என்று முயற்சி செய்யும் எண்ணம் இருக்கிறது.

அரசு அல்லது தகுதிவாய்ந்த தனியார் உதவி செய்தால் எங்கள் முயற்சியை முன்னெடுத்துச் செல்லலாம். கல்லூரிப் படிப்பை முடித்தபின்னும், எதிர்காலத்தில் இதுதொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் எண்ணம் இருக்கிறது. பொருளாதாரமே எங்களுக்குப் பெரிய தடைக்கல். அது மட்டும் அகன்றுவிட்டால், எங்களால் மேலும் வீறுநடை போட முடியும், சமூகத்துக்கும் பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்” என்று கோரஸ் குரலில் கூறி முடித்தனர்.

மாணவ விஞ்ஞானிகளின் முயற்சிகள் வெற்றி பெறட்டும். 

Next Story