கதாநாயகனை மிஞ்சிய வில்லன்


கதாநாயகனை மிஞ்சிய வில்லன்
x
தினத்தந்தி 24 Feb 2018 1:40 PM IST (Updated: 24 Feb 2018 1:40 PM IST)
t-max-icont-min-icon

“திரைப்படத்தின் வசூலிற்கும், கதாநாயகனுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கும்.

ஹாலிவுட் ரசிகர்கள் காதலர் தினத்தை விட, அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் வெளியான ‘பிளாக் பான்தர்’ திரைப்படத்தையே பெரிதாக எதிர்பார்த்தனர். ஏனெனில் கடந்த வருடம் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ திரைப்படத்தில் ‘பிளாக் பான்தர்’ கதாபாத்திரம் அறிமுகமான விதம் அட்டகாசமாக இருக்கும். மேலும் அந்த திரைப்படத்தின் இறுதியில் பிளாக் பான்தரின் நவீன உலகையும் காண்பித்திருப்பார்கள். அதனால் ‘பிளாக் பான்தர்’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு தாறுமாறாக எகிறியது. அதை சரியாக புரிந்துகொண்ட மார்வெல் நிறுவனம், ரசிகர் களின் எதிர்பார்ப்பை ‘பிளாக் பான்தர்’ திரைப்படத்தின் மூலம் முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது.

இதில் பிளாக் பான்தராக போஸ்மேன் நடித்திருக்கிறார். இவருக்கு நான்கு, ஐந்து வில்லன்கள் இருந்தாலும், அதில் ரசிக்க வைப்பது ‘எரிக் கில்மோங்கர்’ என்ற கதாபாத்திரம். கிட்டத்தட்ட ‘பிளாக் பான்தர்’ கதையின் மறைமுக கதாநாயகனும் இவர்தான். ஹீரோவை மிஞ்சும் நடிப்பும், ஆக்ரோஷமான சண்டை காட்சிகளும், கட்டுமஸ்தான உடலும்.. ‘எரிக்’ கதாபாத்திரத்தை கம்பீரமாக தூக்கி நிறுத்தியிருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர், மைக்கேல் பி.ஜோர்டன். இதற்கு முன்பு சில ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும், மைக்கேல் பி.ஜோர்டனுக்கு ‘எரிக்’ கதாபாத்திரம் சிறப்பான ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது. ஹாலிவுட் வட்டாரத்தில் புது அவதாரம் எடுத்திருக்கும் மைக்கேல் பற்றி, பிளாக் பான்தராக நடித்த போஸ்மேன் மனம் திறக்கிறார்.

“இந்தப் படம் மைக்கேலுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் அவரை வில்லனாக ரசித்தோம். வெகுவிரைவில் அவரை கதாநாயகனாக பார்க்கலாம். ஏனெனில் பிளாக் பான்தர் திரைப்படத்தில் அவர் நடித்த விதம், பல புதுப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இன்று நமக்கு ‘எரிக்’ கதாபாத்திரமாக தெரியும் மைக்கேல், இதற்கு முன்பும் ஹாலிவுட் திரையில் தோன்றியிருக்கிறார். ‘பென்டாஸ்டிக் போர்’-2 திரைப்படத்தில் நெருப்பு மனிதனாக மைக்கேல் நடித்திருக்கிறார். ஆனால் அந்த கதாபாத்திரம் மைக்கேலிற்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தரவில்லை. இருப்பினும் அவரது நடிப்பாற்றலை நம்பி, ‘எரிக்’ என்ற வலிமையான வில்லன் கதாபாத்திரத்தைக் கொடுத்தார்கள். இயக்குனரின் நம்பிக்கையை மைக்கேல் காப்பாற்றிவிட்டார். சில காட்சிகளில் அவரது நடிப்பு, என்னுடைய நடிப்பையே மிஞ்சிவிட்டது. அதைத் திரைப்படத்தில் பார்த்து வருத்தப்பட்டேன்” என்றவர், அந்த சூழ்நிலையிலும் மைக்கேலை புகழ்கிறார்.

“திரைப்படத்தின் வசூலிற்கும், கதாநாயகனுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கும். ஆனால் பிளாக் பான்தரின் வசூல் வெற்றியில் மைக்கேலுக்கு தான் அதீத பங்கு இருக்கிறது. ஏனெனில் அவரது கதாபாத்திர புனைவும், அவரது நடிப்பும் நன்றாக இருக்கின்றன. மார்வெல் நிறுவனம் பிளாக் பான்தர் திரைப்படத்தின் கதையை என்னிடம் கூறியபோது, நான் வில்லனாக நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் மார்வெல் நிறுவனத்தினர் வில்லனை புக்கிங் செய்த பிறகுதான் என்னிடம் கதைக்கூற வந்திருக்கிறார்கள். அந்தவகையில் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். அவர்கள் எதிர்பார்த்ததைப் போன்றே மைக்கேல், எரிக் கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார்” என்று கூறிய போஸ்மேன், ஹாலிவுட்டில் இருக்கும் கருப்பினத்தவர் புறக்கணிப்பு புகார் பற்றியும் பேசினார்.

“ஹாலிவுட்டில் கருப்பினத்தவர்கள் புறக்கணிக் கப்படுகிறார்கள் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நிறைய திரைப்படங்களில் கருப்பினத்தவர்களே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏன்..? பிளாக் பான்தர் திரைப்படம் முழுவதிலும், கருப்பினத்தவர்களே நடித்திருக்கிறார்கள். 4 அல்லது 5 கதாபாத்திரங்களை தவிர, மற்ற அனைவருமே கருப்பினத்தவர்கள்தான். இதுமட்டுமின்றி ஹாலிவுட் வரலாற்றில் பல சரித்திரங்களை படைத்தவர்களும் கருப்பினத்தவர்கள்தான். பல கருப்பின இயக்குனர்கள், ஹாலிவுட்டில் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள். கருப்பின நடிகர்கள், ஹாலிவுட்டில் அசத்தியிருக் கிறார்கள். ஏன்..? நடிகைகள் கூட ஹாலிவுட்டில் நிலைத்திருக்கிறார்கள். இப்படி நிறைய உதாரணங்களை சொல்லலாம். அதனால் ஹாலிவுட்டிலும், ஆஸ்காரில் நிறவேறுபாடு பார்க்கப்படுகிறது என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்றவர், தன்னுடைய அடுத்தடுத்த படங்களை பற்றி பேசினார்.

“என்னுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு, ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’. ஏனெனில் பிளாக் பான்தர் திரைப்படத்தில் இருக்கும் ஒருசில குறைகளை இன்பினிட்டி வார் திரைப்படத்தில் நிவர்த்தி செய்திருக்கிறேன். அந்த படம் என்னுடைய நடிப்பு வாழ்க்கைக்கு தேவையான மிகமுக்கிய படிகட்டாக இருக்கும். அதுதவிர, பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறேன். அதை இன்பினிட்டி வார் திரைப்படத்திற்கு பிறகு சொல்கிறேன்” என்று விடைக்கொடுத்தார்.

போஸ்மேன், மைக்கேல் புகழ் பாடியதை வைத்து, அவரிடம் பேச முயற்சிக்க.... தோல்வியே மிஞ்சியது. ஏனெனில் சார், பிளாக் பான்தர் திரைப்படத்திற்கு பிறகு படுபிசியாகிவிட்டாராம். ஏனெனில் ‘கிரிட்-2’ என்ற திரைப்படத்தில் மைக்கேல் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த வருடம் வெளியாக இருக்கும் அந்த திரைப் படத்திற்காக இரவு-பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார், சூப்பர் வில்லன். 

Next Story