ஜேம்ஸ்பாண்ட் அழகிகளும், அசாத்திய திறமைகளும்..!


ஜேம்ஸ்பாண்ட் அழகிகளும், அசாத்திய திறமைகளும்..!
x
தினத்தந்தி 24 Feb 2018 1:44 PM IST (Updated: 24 Feb 2018 1:44 PM IST)
t-max-icont-min-icon

ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகிகள், சில இடங்களில் ஸ்டைலாகவும், சில இடங்களில் அதிரடியாகவும், பல இடங்களில் கவர்ச்சியாகவும் தோன்றி படத்தை அட்டகாசப்படுத்துவார்கள்.

மிரட்டலான சண்டை காட்சிகளுக்கு பிரபலமான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில், அசத்தலான நடிகைகளும் தவறாமல் இடம்பிடிப்பார்கள். சண்டைக் காட்சிகள், அதிநவீன கருவிகள், துரத்தல் காட்சிகள் என பல விஷயங்கள் இருந்தாலும், கதாநாயகிகள் தான் படத்தின் ஹைலைட்டான கவன ஈர்ப்பு. ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகிகள், சில இடங்களில் ஸ்டைலாகவும், சில இடங்களில் அதிரடியாகவும், பல இடங் களில் கவர்ச்சியாகவும் தோன்றி படத்தை அட்டகாசப்படுத்துவார்கள். யுத்தம், முத்தம் என எதற்கும், எங்கேயும், எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் முக்கிய விதிகளில் ஒன்று. இப்படி ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் முக்கிய அங்கமாக இருக்கும், அந்த அழகிகளின் குணாதிசயங்களை பற்றியும், அசாத்திய திறமைகளைப் பற்றியும் பார்ப்போம்.

அழகிகள்

ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகிகளின் முதல் பலம், அழகு தான். ஜேம்ஸ்பாண்டை வலையில் வீழ்த்துவதாகட்டும், வில்லன்களை ஏமாற்றுவதாகட்டும் இவர்களின் முதல் ஆயுதம் அசரடிக்கும் அழகாகத்தான் இருக்கும். உர்சுலா ஆண்ட்ரூஸ் தொடங்கி கடைசியாக வெளியான ‘ஸ்பெக்டர்’ படத்தின் நடிகை மோனிகா பெல்லூச்சி வரை இதற்கு சாட்சிகளாக நிற்கின்றனர்.

சிக்கல் அழகிகள்

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தோன்றும் அழகிகள், பொதுவாகவே மிகத் தெளிவானவர்கள். சமயத்தில் பாண்டையே ஏமாற்றி சிக்க வைத்து, ‘நான் வில்லன் கூட்டத்தில் ஒருத்தி’ என கூறிச் சிரிப்பார்கள். அந்தச் சிக்கலில் இருந்து பாண்ட் எப்படியும் தப்பிவிடுவார் என்பது வேறு கதை. அதே போல் பாண்ட் எப்போது தன்னை நெருங்க வேண்டும், வில்லன் கூட்டத்தில் பாண்டை எப்படி சிக்க வைக்கவேண்டும் என முடிவு செய்வதும் இவர்கள்தான். இவர்கள் கவர்ச்சி கன்னிகளாக தோன்றினாலும், எப்பேர்ப்பட்ட அழகனாக இருந்தாலும் இவர்கள் சம்மதிக்காமல் அவர்களை நெருங்கவோ, தீண்டவோ முடியாது.

எதற்கும் துணிந்தவர்கள்

இவர்களின் தைரியம் அசாத்தியமானது. சில சமயம் அது பிரச்சினையில் முடியும். உதாரணத்திற்கு.. ஜேம்ஸ்பாண்ட் தன்னுடைய கதாநாயகியை, வில்லன்களை ஏமாற்றி காரியம் சாதிக்க அனுப்புவார். அப்படிச் செல்லும் கதாநாயகிகள், வில்லன்களிடம் சிக்கிக் கொள்வார்கள். சில நேரம் பாண்ட் அவர்களைக் காப்பாற்றிவிடுவார். இல்லையெனில் தமிழ் பட போலீஸ் போல, எல்லாம் முடிந்த பின் வந்து வில்லன் மீது வெறியாவார்.

மர்ம மோகினி

ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகிகள், மர்மமானவர்களும் கூட. கடைசி வரை ‘இவள் நல்லவளா? இல்லை கெட்டவளா?’ என சந்தேகத்துடன் தான் இவர்களிடம் ஜேம்ஸ் பாண்ட் பழகுவார். இன்னொரு பக்கம் பாண்ட், பெண்கள் அழகாக இருக்கிறார்களா? என்று மட்டுமே பார்ப்பார். அவர்களின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டமாட்டார். ஏனென்றால், எவ்வளவு ஆபத்து நிறைந்த பின்னணி என்றாலும், அதைச் சமாளிக்கும் தைரியம் அவருக்கு இருக்கும். அதனாலேயே பாண்டை எளிதாக தங்கள் வலையிலோ, படுக்கையிலோ வீழ்த்தி விடுவார்கள் பாண்ட் அழகிகள்.

எதற்கும் தயார்

திடீரென வில்லன்கள் துரத்து கிறார்கள். அணிந்திருக்கும் ஹை ஹீல்ஸுடன் ஓட்டம் பிடிக்க வேண்டும் என்றால், ஓடித்தான் ஆக வேண்டும். சண்டை போட வேண்டும் என்றால் அடியாட்களை தெறிக்க விடவேண்டும். பாண்டுக்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டுமென்றாலும் தயங்காமல் செய்ய வேண்டும். இப்படி என்ன செய்ய வேண்டும் என்றாலும், நேரம், காலம் பார்க்காமல் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பார்கள் ஜேம்ஸ்பாண்ட் நாயகிகள்.

பெண் ஜேம்ஸ் பாண்ட்

பாண்ட் அழகிகள், கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்டின் பெண் உருவமாக இருக்கவேண்டும். திடீரென எதாவது தகவல் கிடைத்தால் தானாக துப்பு துலக்க கிளம்ப வேண்டும். யாரை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும், அது ஜேம்ஸ் பாண்டாகவே இருந்தாலும் தைரியமாக செய்ய வேண்டும். அதனால் தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் பாண்ட் அழகிகள் ரசிக்க வைக்கிறார்கள். 

Next Story