ஓட்டப்பிடாரம் அருகே திருமணமான 3 நாளில் புதுப்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் போலீசார் தீவிர விசாரணை


ஓட்டப்பிடாரம் அருகே திருமணமான 3 நாளில் புதுப்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 25 Feb 2018 2:30 AM IST (Updated: 24 Feb 2018 5:57 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே திருமணமான 3 நாளில் புதுப்பெண்ணை வாலிபர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே திருமணமான 3 நாளில் புதுப்பெண்ணை வாலிபர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுப்பெண்

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெற்றிவேல் (வயது 33) கூலித் தொழிலாளி. இவருக்கும், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தை சேர்ந்த மாடசாமி மகள் விஜயலட்சுமி (27) என்பவருக்கும் கடந்த 19–ந் தேதி தூத்துக்குடி அண்ணாநகரில் வைத்து திருமணம் நடந்தது.

கடந்த 21–ந் தேதி காலையில் புதுமண தம்பதியினர் மறுவீட்டு நிகழ்ச்சிக்காக மேலமுடிமண் வந்தனர். அன்று மாலையில் விஜயலட்சுமி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடைய கணவர் வெற்றிவேல் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஜயலட்சுமியை அக்கம்பக்கத்திலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடத்தல்

இதுகுறித்து வெற்றிவேல் ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் விஜயலட்சுமியை அந்த பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகன் மதன் (28) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. விஜயலட்சுமிக்கும், மதனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதனுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இருந்த போதிலும் விஜயலட்சுமி, மதனுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. மறுவீட்டிற்கு வந்த அவரை மதன் கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

இதற்கிடையே மதனின் மனைவி ஜெயச்சித்ரா, தனது கணவரை காணவில்லை என்று ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டப்பிடாரம் அருகே திருமணமான 3 நாளில் புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story