போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்


போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2018 3:00 AM IST (Updated: 24 Feb 2018 11:05 PM IST)
t-max-icont-min-icon

போட்டித்தேர்வுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலை கல்லூரியில், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த 55 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

அதே போல 1,629 வேலையில்லாத இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 235 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.

மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டிகள் நிறைந்த உலகில் வேலைவாய்ப்பு பெற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறவேண்டும்.

மேலும் மாணவ, மாணவிகள் தனிதிறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெருநகரங்களில் வேலை வாய்ப்பு பெற கடும் போட்டிகள் நிலவி வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பணி வழங்குவது பெருமைக்குரியதாகும். படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் பெண்கள் இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்தி பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கீதா, உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் நன்றி கூறினார்.

Next Story