ஆழியாறு தண்ணீரை திறந்துவிடக்கோரி போராட்டம் போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட்டன


ஆழியாறு தண்ணீரை திறந்துவிடக்கோரி போராட்டம் போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 25 Feb 2018 4:15 AM IST (Updated: 25 Feb 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு தண்ணீரை திறந்துவிடக்கோரி போராட்டம் நடைபெறுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட்டன. மீனாட்சிபுரம் அருகே 8 லாரிகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்பந்தம் உள்ளது. ஆழியாற்றில் திறக்கப்படும், தண்ணீர் மணக்கடவு என்ற இடத்தில் கேரளாவுக்கு அளந்து கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வழங்க மே மாதம் வரை காலஅவகாசம் உள்ளது.

இதற்கிடையில் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 63 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆழியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விடப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. மேலும் அணையில் இருந்து விவசாயத்துக்கும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி கேரளா ஜனதா தளம் கட்சி மற்றும் விவசாயிகள் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால் பெரும்பாலான லாரிகள் கோவை அருகே உள்ள வாளையாறு சோதனைச்சாவடி வழியாக திருப்பி விடப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த லாரிகளில் காய்கறிகள், கறிக்கோழி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும், பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, பாலக் காடு துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் லாரிகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து கோபாலபுரம் சோதனைச்சாவடியில் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது 10 லாரிகளை மொத்தமாக அனுப்புவது என்றும், லாரிகளுக்கு முன்னும், பின்னும் ஒரு வாகனத்தில் கேரள போலீசார் பாதுகாப்புக்கு செல்வது என்றும், சித்தூர் பகுதி வரை தான் பிரச்சினை என்பதால் இரட்டைகுளம் வரை போலீசார் பாதுகாப்புக்கு செல்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் பாதுகாப்பிற்காக தமிழக-கேரள எல்லையில் கேரள மாநில ஆயுதப்படை போலீசார் 40 பேர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு முதலில் 10 லாரிகள் கோபாலபுரம் சோதனைச்சாவடிக்கு வரவழைக் கப்பட்டது. அந்த லாரிகளின் டிரைவர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி அழைத்து பேசும்போது, யாரும் தனியாக டீ குடிக்கவோ, வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பவோ செல்ல கூடாது. இடையில் வேறு எந்த காரணத்துக்கும் லாரிகளை நிறுத்த கூடாது. சித்தூர் பகுதி எல்லை வரை போலீசார் பாதுகாப்புக்கு வருவார்கள். யாராவது வாகனங்களை மறித்து தாக்கினால், என்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்ட லாரிகளுக்கு முன்னால் கேரள போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர். இதேபோன்று மீனாட்சிபுரத்தில் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணியம், பாலக்காடு துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தி, அந்த வழியாக போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளை இயக்கினார்கள்.

இதற்கிடையில் யாராவது லாரிகளை தாக்கினால், அவர்களை பிடித்து தாக்கி விடக்கூடாது எனவும், போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பாலக்காடு துணை சூப்பிரண்டு விஜயகுமார் கேரள போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோபாலபுரம், மீனாட்சிபுரம் வழியாக மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் நடுப்புணி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதற்கிடையில் மீனாட்சிபுரம் வழியாக சென்ற 8 லாரிகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இதுகுறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அசம்பாவிதங்களை தடுக்க தமிழக போலீசாரும் கேரள எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரனிடம், பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெபதாஸ், செயலாளர் சேதுபதி மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக சரக்கு வாகனங்களை கேரளாவுக்கு இயக்க முடியாத அளவுக்கு தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் தமிழக லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன் கேரளா, தமிழகம் இடையே வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.50 கோடி வீதம் 3 நாட்களில் ரூ.150 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனே தலையிட்டு சரக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தற்போது ஒட்டன்சத்திரம் போன்ற வெளியூர்களில் இருந்து கேரளாவுக்கு லாரிகளில் காய்கறி கொண்டு செல்வது தடைபட்டு உள்ளது. மேலும் வாளையாறு சோதனைச்சாவடி வழியாக செல்வதால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால் கேரளாவில் காய்கறி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர். 

Next Story