கிராம நிர்வாக அலுவலரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு


கிராம நிர்வாக அலுவலரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கிராம நிர்வாக அலுவலரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர்திருக்கை என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 30). இவர் நங்காத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் சொந்த வேலை காரணமாக ஏனாதிமங்கலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து இரவில் அத்தியூர்திருக்கைக்கு புறப்பட்டார்.

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் வந்தபோது சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த பகுதியில் நடந்து சென்றார். அந்த சமயத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென கோவிந்தனை கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துச்சென்றார்.

இதுகுறித்து கோவிந்தன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story