தம்பதி மீது தாக்குதல் பழக்கடை சூறை


தம்பதி மீது தாக்குதல் பழக்கடை சூறை
x
தினத்தந்தி 25 Feb 2018 4:00 AM IST (Updated: 25 Feb 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே கடனுக்கு பழம் தர மறுத்ததால் தம்பதியை தாக்கி, பழக்கடையை சூறையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டிச்சாவடி,

கடலூரை அடுத்த ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 63). இவருடைய மனைவி தமிழரசி (47). புதுவை- கடலூர் சாலையில் சக்திவேல் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடையில் சக்திவேலும், அவரது மனைவியும் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது புதுவையை சேர்ந்த ஜான்டேனியல் (25), ஜேசுதாஸ் (19), சல்மான் (22), சுபாஷ் (21) ஆகியோர் பழக்கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தமிழரசியிடம் கடனுக்கு பழம் கேட்டனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தமிழரசியை திட்டி, தாக்கினர். இதனை தடுத்து சக்திவேலையும் அவர்கள் தாக்கினர். பின்னர், பழக்கடையை அவர்கள் சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதில் படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தமிழரசி ரெட்டிச்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து ஜான்டேனியல், ஜேசுதாஸ், சல்மான், சுபாஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story