புதுச்சேரி துறைமுகத்தில் சரக்கு கப்பல் வெள்ளோட்டம்


புதுச்சேரி துறைமுகத்தில் சரக்கு கப்பல் வெள்ளோட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி துறைமுகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளதையொட்டி வெள்ளோட்டம் நடந்தது. இதை கவர்னர் கிரண்பெடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி துறைமுகம் கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் துறைமுகம் செயல்படவில்லை. இந்தநிலையில் துறைமுகத்தை மீண்டும் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து சென்னை துறைமுக கழகம், புதுச்சேரி துறைமுகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி சென்னை துறைமுகத்திற்கு புதுச்சேரி துறைமுகம் துணை துறைமுகமாக செயல்பட உள்ளது. இதற்காக இங்கு 14 ஆயிரம் டன் வரையில் சரக்குகளை கையாளும் வகையில், 4 கிடங்குகள், சாலை அமைக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து இறக்கும் சரக்குகளை குடோனில் வைக்க 45 டன் எடை உள்ள கன்டெய்னர்களை தூக்கும் ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதையொட்டி சென்னையில் இருந்து 24 கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் ‘சவுக்லோ 8’ என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த கப்பல் நேற்று காலை புதுச்சேரி துறைமுகத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மாலையில் கப்பல்கள் மூலம் சரக்குகளை கையாள்வதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், ஜெயமூர்த்தி, விஜயவேணி உள்பட பலர் கலந்து கொண்டு வெள்ளோட்டத்தை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.

புதுச்சேரியின் மிகப்பெரிய சொத்து இந்த துறைமுகம். கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துறைமுகம் செயல்பட உள்ளது. இதற்கான வெள்ளோட்டம் தற்போது நடைபெற்று உள்ளது. துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கு சாலை போக்குவரத்து வசதிக்காக பைபாஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் துறைமுகத்தில் உப்பனாறு வழியாக கழிவுகள் கலப்பது தடுக்கப்படும்.

புதுச்சேரிக்கு பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) வருவதால் அமைச்சரவை கூடி என்ன தெரிவிக்கிறதோ அதை பிரதமரிடம் தெரிவிப்பேன். புதுச்சேரிக்கான நிதியை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் பிரதமரிடம் வலியுறுத்துவேன். அமைச்சர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கு துறைமுக திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இங்கு சரக்கு கப்பல் வந்து செல்லும் அளவுக்கு ஆழம் சரியாக உள்ளதா? வசதிகள் எப்படி உள்ளது? என்பது குறித்து வெள்ளோட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு துறைமுகத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கான தொடக்க விழா நடைபெறும். இதில் மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளனர்.

சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதால் துறைமுக பகுதியில் தொழில்செய்து வரும் மீனவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரிக்கு வரும் பிரதமரை சந்தித்து மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கித் தருமாறு கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story