மராட்டிய சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது


மராட்டிய சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 Feb 2018 4:50 AM IST (Updated: 25 Feb 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

மும்பை,

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக விவசாயிகள் தற்கொலை, வேலைவாய்ப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, மற்றும் பீமா- கோரேகாவ் கலவரம் என பல்வேறு காரணங்களால் சட்டசபை அமைதி இழக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பல முறை சந்தித்து, சட்டசபையில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் (காங்கிரஸ்) கூறியதாவது:-

மராட்டிய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தீவிரமாக நடத்தியது.

இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த ‘மேக் இன் இந்தியா’ மாநாடு மூலம் பெறப்பட்ட முதலீடுகள் என்ன ஆனது என்பது குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கோரவுள்ளோம்.

யவத்மால் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்திய விவசாயிகள் மூச்சுத்திணறி இறந்தனர். இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு சம்பந்தபட்ட பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதே தவிர விவசாயிகளின் உயிரிழப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து அரசிடம் கேள்வி எழுப்பப்படும்.

அதுமட்டும் இல்லாமல் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, விவசாயிகள் பலருக்கு இன்னமும் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படாதது, மரத்வாடா, விதர்பா மண்டலங்களில் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படாதது குறித்தும் பிரச்சினை கிளப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இருப்பினும் இந்த முறை சட்டசபையில் பீமா-கோரேகாவ் வன்முறை சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

Next Story