குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் கேலிப்பேச்சுகள்


குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் கேலிப்பேச்சுகள்
x
தினத்தந்தி 25 Feb 2018 12:06 PM IST (Updated: 25 Feb 2018 12:06 PM IST)
t-max-icont-min-icon

‘உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதை எல்லாம் வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை பெற்றோர்களிடம் கேட்டால், பதிலாக சொல்ல அவர்கள் நிறைய விஷயங்களை வைத்திருக்கிறார்கள்.

‘உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதை எல்லாம் வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை பெற்றோர்களிடம் கேட்டால், பதிலாக சொல்ல அவர்கள் நிறைய விஷயங்களை வைத்திருக்கிறார்கள். ‘குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை வழங்குகிறோம். சத்துணவுகளை கொடுக்கிறோம். அவர்களுக்கு தேவையான சவுகரியங்களை உருவாக்கித்தருகிறோம். வருடத்திற்கு ஒன்றிரண்டு சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.

பெற்றோர் கொடுத்துக்கொண்டிருக்கும் இவை எல்லாம் குழந்தைகளுக்குத் தேவைதான் என்றாலும், இப்போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்வதும், அவர்களது மனக்குழப்பத்தை போக்க எதை தற்போது வழங்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்வதும் மிக அவசியம்.

குழந்தைகளுக்கு தற்போது ஏற்படும் மனநெருக்கடிகளை அறிந்துகொள்ள இதோ மூன்று சம்பவங்கள்!

ஒன்று:

அந்த சிறுமிக்கு 9 வயது. வீட்டிற்கு ஒரே குழந்தை. அதனால் பெற்றோருக்கு செல்ல மகள். தேவைக்கு மீறிய சுவையூட்டிய உணவுகள் வழங்கப்பட்டு, அவள் அளவுக்கு மீறிய உடல்வாகுவை பெற்றிருந்தாள். மதிய உணவை தோழிகளோடு அமர்ந்துதான் உண்பாள். அவளது டிபன் பாக்ஸ் அளவு பெரியது. ஒன்றிரண்டு உணவு வகைகளும் கூடுதலாக இருக்கும். மதிய உணவிற்காக அதை எடுத்து பரப்பும்போது, தோழிகள் எல்லாம் தங்களது சிறிய டிபன்பாக்ஸ்களை திறந்துவைத்துக்கொண்டு, அவளது சாப்பாட்டு அளவை கிண்டலடித்து சிரித்து, அதனால்தான் அவள் உடல் குண்டாகிவிட்டது என்பார்கள். அவர்களது கேலிப் பேச்சை சகித்துகொள்ள முடியாத அவள், மதிய உணவு சாப்பிடுவதையே தவிர்த்துவிட்டாள். அம்மாவிடம் இதை எல்லாம் சொல்ல விரும்பாமல், மாலையில் சாப்பாட்டை அப்படியே கொண்டுபோய் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு வெறும் பாத்திரத்தோடு வீட்டிற்கு கிளம்பிப்போய்விடுகிறாள். அதனால் அவளது உடல் நலமும், மனநலமும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இரண்டு:

இவளுக்கு 11 வயது. வசதிபடைத்த குடும்பத்து குழந்தைகள் பயிலும் பள்ளி ஒன்றில் படிக்கிறாள். இவளும் வசதிபடைத்த குடும்பத்து சிறுமிதான். இவளோடு வகுப்பில் உள்ள சிறுமிகள் அனைவருமே பளிச்சென்ற நிறம் கொண்டவர்கள். இவள் மட்டும் பெற்றோரை போன்று களையான மாநிற மேனி கொண்டவள். ஆனால் தோழிகளோ இவளது நிறத்துக்கு காக்காய், கருங்குயில் என்றெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார்கள். நிறத்தை காரணங்காட்டி இவளை தங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் தனிமைப் படுத்தியிருக்கிறார்கள். அதனால் அவளுக்கு தன் உடல் மீதும், நிறத்தின் மீதும், பெற்றோரின் மீதும் கடுங்கோபம் தோன்றியது. ‘என்னை மாநிறமாக பெற்றெடுத்ததன் மூலமாக எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்’ என்று பெற்றோரிடம் சண்டையிட்டு, மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறாள்.

மூன்று:

அவள் 14 வயது மாணவி. அவளோடு படிக்கும் மாணவிகள் அனைவருமே இந்த பருவத்தில் வயதுக்கு வந்துவிட்டார்கள். இவள் மட்டும் இன்னும் பூப்படையவில்லை. ‘நீ கடந்த ஜென்மத்தில் பாவம் செய்திருக்கிறாய். அதனால் கடவுள் உன்னை தண்டித்துவிட்டார். இனி நீ பூப்படையவேமாட்டாய்’ என்று மிரட்டியிருக்கிறார்கள். அது அவளுக்கு பயத்தையும், கவலையையும் உருவாக்கிவிட்டது.

இது போன்று நடக்கும் பல்வேறு சம்பவங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையையும் பாதிக்கின்றன. சிறுவர், சிறுமிகள் என்ற பேதமின்றி எல்லா குழந்தைகளும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை உணர்ந்துகொள்ளாமல், ‘நமது குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து, அவர்களை நல்லபடியாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று, உண்மையை அறியாமல் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் தேடிவந்து ஏதாவது பேச வாயெடுத்தால், பல பெற்றோர்கள் அதை கவனமாக நிதானித்து கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா? இதைப்போய் சொல்லவந்துவிட்டாயே!’ என்பதுபோல் அலட்சியமாக பதிலளித்துவிடுகிறார்கள்.

இப்போது பெரியவர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிப்பதுபோல், குழந்தைகளுக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. அந்த பிரச்சினைகளை குழந்தைகளின் மனநிலையில் இருந்தும், குழந்தைகளின் சூழ்நிலையில் இருந்தும் உணர்ந்தால் மட்டுமே அதை தெளிவாக அணுகி, தீர்வு காணமுடியும். பெற்றோர் தங்கள் சிந்தனையை விசாலப்படுத்திக்கொண்டால் மட்டுமே குழந்தைகளை சரியாக அணுகி, பேசி, அவர்களது பிரச்சினைகளை முழுமையாக உணரமுடியும்.

பிரச்சினைகள், கேலிப் பேச்சுகளால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் குழந்தைகளிடம் கீழ்க்கண்ட சில அறிகுறிகள் தென்படும்.

- தோழிகளிடம் இருந்து விலகி, தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.

- கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவுவார்கள்.

- பேசுவதற்கு ஆர்வமில்லாமல் ஒதுங்கிக்கொள்வார்கள்.

- பள்ளிக்கு செல்வதை தவிர்க்கப்பார்ப்பார்கள்.

- உணவில் ஆர்வம் குறைந்துபோயிருக்கும்.

- விரக்தியுடன் காணப்படுவார்கள்.

- அளவுக்கு அதிகமாக கோபம் வரும்.

- பிடிவாதம் பிடிப்பார்கள்.

- வீட்டிலும், பள்ளியிலும் சண்டைபோட்டபடி இருப்பார்கள்.

- தூக்கம் குறையும்.

- படிப்பில் பின்தங்குவார்கள்.

- பிரச்சினைக்குரிய பழக்கவழக்கங்களில் ஈடுபட முயற்சிப்பார்கள்.

சோர்வு, அலட்சியம், விரக்தி, கோபம் போன்றவை குழந்தை களிடம் வெளிப்படத் தொடங்கிவிட்டாலே பெற்றோர் உடனே அதற்கான காரணங்களை அறிய முன்வரவேண்டும். மாறாக, ‘வேண்டுமென்றே அவ்வாறு குழந்தை செய்கிறது. காலப்போக்கில் அதுவாகவே சரியாகிவிடும்’ என்று நினைத்து, அதற்கு தீர்வு காணாமல் இருந்துவிடக்கூடாது.

குழந்தைகளின் மனநிலையை உணர்ந்துகொள்ள அவர் களோடு பெற்றோர் அதிக நேரத்தை செலவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் சிறிது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கிவைத்து, அந்த நேரத்தில் மனம்விட்டுப் பேசினாலே போதும்.

குழந்தைகளுக்காக கவுன்சலிங்கிற்கு வரும் பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் மிகுந்த கடனுக்கு மத்தியிலும், கஷ்டங் களுக்கு மத்தியிலும் வாழ்வதாக சொல்கிறார்கள். கடனாலோ, இதர பிரச்சினைகளாலோ பெற்றோருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அதற்கு குழந்தை காரணமில்லை. பெற்றோர் தாங்களாக மனஅழுத்தத்தை உருவாக்கிக்கொண்டு அதற்காக குழந்தைகளை குறைசொல்லக்கூடாது. தங்கள் கவலைகளையும், கஷ்டங்களையும் குழந்தைகளிடம் திணிக்கவும்கூடாது. அவர்களை குழந்தைகளாகவே வாழவும், வளரவும் அனுமதிக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு தேவையான முக்கியத்துவமும், அன்பும் பெற்றோர்களிடமிருந்து மட்டுமல்ல, அவர்கள் அதிக நேரத்தை செல விடும் ஆசிரியர்களிடமிருந்தும் கிடைக்கவேண்டும். சமூகமும் இதில் தனது பங்களிப்பை சரிவர செய்யவேண்டும். ஒட்டுமொத்தமாக அனைவரும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தினால்தான், அவர்களது மனஅழுத்தம் குறைந்து, அவர்களது மனநிலையில் நல்ல மாற்றமும், மறுமலர்ச்சியும் உருவாகும்.

- விஜயலட்சுமி பந்தையன்

Next Story