முத்தத்திற்கு முடிவில்லை


முத்தத்திற்கு முடிவில்லை
x
தினத்தந்தி 25 Feb 2018 7:11 AM GMT (Updated: 25 Feb 2018 7:11 AM GMT)

இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்க கணவன் ஒருசில விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

ல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்க கணவன் ஒருசில விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். பொறுமையையும், சகிப்பு தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்வுக்கு வித்திடும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

கணவரை மட்டுமே நம்பி தங்களுடைய குடும்பத்தினரை பிரிந்து வந்திருக்கும் துணையிடம் எக்காரணத்தை கொண்டும் கடுமை காட்டக்கூடாது. ஈகோ பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெளி இடங்களுக்கு மனைவியை முதலில் அனுப்பிவிட்டு கணவன் பின்னால் செல்லக் கூடாது. மனைவியின் கரங்களை பிடித்துக்கொண்டு சந்தோஷமாக சிரித்து பேசியபடி செல்ல வேண்டும். இதைத்தான் எல்லா பெண்களும் எதிர்பார்ப்பார்கள்.

சமையல் செய்யும்போது சின்னச் சின்ன உதவிகள் செய்ய முன்வர வேண்டும். சமையல் ருசியாக இல்லாத சமயங்களில் மனம் நோகும் படியான விமர்சனங்களை கூறக்கூடாது.

எதிர்கால திட்டங்களை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் விஷயங்களில் மனைவியின் எதிர்பார்ப்பு களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவை அவசியமானதாகவோ அல்லது ஆடம்பர பொருளாகவோ இருந்தாலும் மனைவியின் விருப்பங் களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. தற்போதைக்கு அவசிய தேவையாக இல்லாத பட்சத்தில் சில காலம் கழித்து வாங்கிவிடலாம் என்ற ஆறுதல் வார்த்தைகளையாவது உதிர்க்க வேண்டும்.

அலுவலக வேலைப்பளுவின் காரணமாக எழும் மன அழுத்தங்களை மனைவி மீது கோபமாக கொட்டக்கூடாது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப காலதாமதம் ஆகும் சமயங்களில் முன்கூட்டியே மனைவிக்கு தெரியப்படுத்திவிடுவது நல்லது.

தினமும் ஒரு வேளை சாப்பாட்டையாவது மனைவியுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சாப்பாட்டை மனைவிக்கு ஊட்டியும் விடலாம். அப்போது மனைவி மனம் குழந்தையாக மாறிவிடும்.

திருமணமான புதிதில் அலுவலகம் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் பொழிந்த அன்பையும், முத்தத்தையும் தொடர முயல வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் மனைவி எதிர்பாராதவிதமாக அவ்வப்போது அன்பையும், அரவணைப்பையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

மனைவி வழக்கத்தைவிட அமைதியாக இருந்தால் ஏதாவது பிரச்சினைக்குரிய சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதுபற்றி கேட்கும்போது, ‘ஒன்னும் இல்லையே’ என்ற பதில் வந்தால் ஏதோ ஒன்றை மனதில் வைத்திருக்கிறார் என்று அர்த்தம். உடனே அது என்ன என்பதை கண்டறிந்து அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிவிட வேண்டும்.

வெளியிடங்களுக்கு மனைவி கிளம்பும் சமயங்களில் அவரை அவசரப்படுத்தக்கூடாது. அளவுக்கு அதிகமாக ஒப்பனை செய்திருந்தால் நாசுக்காகவே தெரியப்படுத்த வேண்டும். அவர்களாகவே ‘மேக்-அப் ஓவராக இருக் கிறதா?’என்று கேட்டால் உடனே ஆமாம் என்று சொல்லிவிடக்கூடாது. ‘நீ எப்பவுமே அழகுதான். அதிக மேக்கப் உன் அழகை கெடுத்துவிடும் போல இருக்கிறது’ என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.

உங்கள் வாழ்வின் இறுதிவரை பயணிக்கும் துணையை அளவுக்கதிகமாக நேசியுங்கள். இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டால் அதனை பக்குவமாக எதிர்கொள்ள மனதை தைரியப்படுத்துங்கள். கோபத்தை விட்டொழியுங்கள்.

மனைவியிடம் இருக்கும் குறைகளை பெரிதுபடுத்த முயற்சிக்காதீர்கள். கணவருக்காக சிரத்தை எடுத்து செய்யும் விஷயங்களை மனம் விட்டு பாராட்டுங்கள்.

மனைவி ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்தால் அவருடைய கோணத்தில் இருந்தும் சிந்தித்து பார்க்க வேண்டும். எத்தகைய சூழலிலும் மனதை அமைதியாக வைத்திருக்க பழகுங்கள். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிலைத் திருக்க எல்லா விதமான முயற்சிகளையும் எடுங்கள்.

Next Story