பெண்களுக்கான வேலைவாய்ப்பு - ஆடு வளர்ப்பு -2


பெண்களுக்கான வேலைவாய்ப்பு - ஆடு வளர்ப்பு -2
x
தினத்தந்தி 25 Feb 2018 9:09 AM GMT (Updated: 25 Feb 2018 9:09 AM GMT)

கடந்த வாரம் ஆட்டினங்கள், ஆடுகளை தேர்வு செய்யும் முறை, வளர்ப்பு முறைகள், அவைகளுக்கான கொட்டகை அமைக்கும் முறை குறித்து பார்த்தோம்.

டந்த வாரம் ஆட்டினங்கள், ஆடுகளை தேர்வு செய்யும் முறை, வளர்ப்பு முறைகள், அவைகளுக்கான கொட்டகை அமைக்கும் முறை குறித்து பார்த்தோம். ஆடு வளர்ப்பில் தீவன மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவைகளுக்கான தீவனம் சரிவர கிடைக்காவிட்டால் எடை இழப்பை சந்திக்க நேரிடும். அது விற்பனை வாய்ப்பை பாதிக்கும். ஆடுகளுக்கு பசுந்தீவனத்தோடு அடர்தீவனமும் கலந்து கொடுத்தால் எடை வேகமாக அதிகரிக்கும்.

ஆடுகளுக்கேற்ற தீவனங்கள்

அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காபுளி, அச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, வாகை, வேம்பு, வேள்வேல், உதியன், கருவேலம், குடைவேல், ஆல், அத்தி, பலா, இலந்தை, நாவல் போன்றவை. ஒரு வெள்ளாட்டிற்கு தினமும் 5 முதல் 6 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும். புல் வகை தீவனம் 3 முதல் 3.5 கிலோ வரையும், பயறுவகை தீவனம் 2 கிலோவும், மரத்தழைகள் 1.5 கிலோவும் கொடுக்கலாம்.

தாது உப்புக்கட்டி

மேய்ச்சலில் வளரும் ஆடுகளுக்கு அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது. குறிப்பாக சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் சினை பிடிப்பது காலதாமதமாகும். இதனை தவிர்க்க தாது உப்புக்கட்டியை கொடுப்பது அவசியம். தாது உப்புக்கட்டியில் முக்கிய தாது உப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம், மக்னீசியம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்றவையும் உள்ளடங்கி இருக்கின்றன. இந்த தாது உப்பு கட்டியை ஆட்டுக்கொட்டகையில் கட்டி தொங்க விட்டு வளரும் ஆடுகள், சினை மற்றும் குட்டி ஈன்ற ஆடுகளுக்கு கொடுக்கலாம். வெள்ளாடுகளுக்கு அயோடின் சத்து கலந்த சமையல் உப்பு மிகவும் அவசியம். இது தாது உப்பு கட்டியில் கலந்திருப்பதால் அதனை வழங்கவேண்டும்.

அடர் தீவனம்

ஆடுகளின் உடல் எடைக்கேற்ப அடர் தீவனம் அளிக்க வேண்டும். அதாவது உடல் எடையில் 1 முதல் 1.5 சதவீதம் அடர் தீவனம் கொடுக்க வேண்டும். 3 முதல் 6 மாதம் ஆன குட்டிகளுக்கு தினமும் 150 கிராம் தீவனம் கொடுக்கலாம். கடலைப்பொட்டு, உளுந்து தோல், பருத்தி விதைத்தோல், சோயா மொச்சைதோல், மரவள்ளி கிழங்கு மாவு, புளியங்கொட்டை மாவு, வேப்பம்புண்ணாக்கு, கருவேலம் மற்றும் சீமைக் கருவேல மர நெற்றுக்கள் போன்றவைகளை பயன்படுத்தி அடர் தீவனம் தயாரிக்கலாம். அதன் மூலம் தீவன செலவை குறைக்கலாம்.

முழுத் தீவனம்

முழுத் தீவன தயாரிப்பில் 30 சதவீதம் சோளத்தட்டை, 20 சத வீதம் உலர்ந்த சூபாபுல் இலை, 17 சதவீதம் தவிடு, 30 சதவீதம் சீமை கருவேலம் அல்லது கருவேல மரக்காய் அல்லது நெற்றுகள், 2 சதவீதம் தாது உப்பு கலவை, 1 சதவீதம் உப்பு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். வெள்ளாடுகளுக்கு மேய்ச்சல் வாய்ப்பு குறைவாக உள்ள காலங்களில் அடர் தீவனத்திற்கு மாற்றாக முழுத்தீவனம் தயாரித்து வழங்கலாம். 20 கிலோ எடையுள்ள வெள்ளாட்டிற்கு மேய்ச்சலுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ கொடுத்து வந்தாலே போதுமானதாகும். தீவன செலவு குறையும். ஆடுகளும் நல்ல முறையில் வளரும்.

பசுந்தீவனங்கள்

பசும்புற்களான கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல் (கோ-3, கோ-4 ரகம்) கினியா புல், வேலி மசால், முயல் மசால், தீவன சோளம் (கோ.எப்.எஸ்.-29 ஆகியவற்றையும், சூபாபுல், அகத்தி, வேம்பு, கொடுக்காப்புளி, மல்பெரி, கிளிசிடியா, கருவேலம், ஆல், பலா மற்றும் வாகை ஆகிய மரங்களின் இலைகளையும் பசுந்தீவனங்களாக அளிக்கலாம். அவைகளை நிழலில் உலர்த்தி கொடுப்பது நல்லது. பசும்புற்களை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி தீவன தொட்டியில் போட்டு வைத்தால் புற்கள் விரயமாவதை தவிர்க்கலாம்.

அதேவேளையில் பருவம் அடைந்த பெட்டை ஆடுகளுக்கு மேய்ச்சலை தவிர்த்து புற்கள் மற்றும் மர இலைகளை தினமும் 1 கிலோ அளிக்க வேண்டும். பொலி கிடாக்களுக்கு இனச்சேர்க்கை காலங்களில் 300 முதல் 400 கிராம் வரை அடர் தீவனம் மற்றும் 7 முதல் 8 கிலோ வரை பசுந்தீவனம் கொடுப்பது நல்லது.

இனப்பெருக்க மேலாண்மை

வெள்ளாடுகள் வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். செம்மறி ஆடுகள் வருடத்தில் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். ஆடு, குட்டி ஈன்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் சினையாக வேண்டும். அப்படி செய்தால்தான் இரண்டு ஆண்டுகளில் 3 முறை குட்டி ஈனும் வாய்ப்பு உருவாகும். அதன் மூலம் ஆடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யலாம். வருவாயும் பெருகும். குறிப்பிட்ட காலத்துக்குள் சினை தருணத்தை தவறவிட்டால் ஆட்டுக்கான தீவன செலவு பயனற்றதாகிவிடும். அதனால் ஆடுகளின் இனப்பெருக்கத்திற்கு செயற்கை முறை கருத்தரிப்பும் பின்பற்றப்படுகிறது.

பெட்டை ஆடு

இனப்பெருக்க பண்புகளை பொறுத்தவரை பெட்டை ஆடுகள் அதிக தீவனம் உட்கொள்ளும் திறனுடனும், உடல் பருத்தும், நீளமாகவும் அமைந்திருக்க வேண்டும். அதன் தோள் பகுதி குறுகியும், இடுப்பு பகுதி அகன்றும் இருக்க வேண்டும். அதன் மடி பெரியதாகவும், உடலோடு ஒட்டியும், காம்புகள் இரண்டும் ஒரே அளவில் நேராக கீழ் நோக்கியவாறும், பால் கறந்தவுடன் மடியும் காம்பும் நன்கு சுருங்க கூடியதாகவும் இருக்க வேண்டும். காம்புகள் குறைந்தபட்சம் 8 செ.மீ. நீளமாகவும், தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் சற்றே தளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்

கிடா ஆடு

இனப்பெருக்க பண்புகளை பொறுத்தவரை கிடா ஆடுகளின் நெஞ்சு அகன்றும், மார்பு எலும்புகள் நன்கு விரிந்தும் காணப்பட வேண்டும். கால்கள் பலமுள்ளதாகவும், உடல் நீளமாகவும், அகன்றும் இருப்பது அவசியம். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். பருவமடைந்த கிடா சுமார் 60 முதல் 70 கிலோ வரை எடை கொண்டிருக்க வேண்டும்.

பருவமடைதல்

தரமான அடர்தீவனம் மற்றும் பசுந்தீவனம் கொடுத்து வளர்க்கப்பட்ட பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களிலும், கிடா 8 முதல் 10 மாதங்களிலும் பருவமடையும். பெட்டை ஆடுகளை 15 மாதங் களுக்கு பிறகும், கிடாக்களை 18 மாதங்களுக்கு பிறகும் இனசேர்க்கைக்கு பயன்படுத்த வேண்டும்.

சினை ஆடுகளை கவனிக்கும் முறை

சினை ஆடுகளை மேய்ச்சலுக்காகவோ, மற்ற காரணங்களுக்காகவோ அதிக தூரம் நடக்கவிடக்கூடாது. கொட்டகையின் தரைப்பகுதி வழுக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மற்ற ஆடுகளோடு மோதல் ஏற்படாதவகையிலும் கவனமாக பராமரிக்க வேண்டும். சினை ஆட்டுக்கு தேவையான உணவுச் சத்து, கரு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து போன்றவை தீவனங்கள் மூலம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சினை ஆடுகளை கருச்சிதைவு ஏற்பட்ட, நோய்வாய்பட்ட மற்ற ஆடுகளோடு சேர்வதை தவிர்க்க வேண்டும். வெப்பம் மற்றும் குளிர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பும், தேவையான அளவிற்கு தரமான குடிநீரும் வழங்க வேண்டியது அவசியமாகும். கருச் சிதைவு ஏற்படுமாயின் கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதற்கான காரணத்தை அறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

குட்டிகள் பராமரிப்பு

குட்டி பிறந்தவுடன் வால் மற்றும் நாசி துவாரத்தில் காணப்படும் பிசுபிசுப்பான திரவத்தை சுத்தமான துணி கொண்டு துடைத்துவிட வேண்டும். தொப்புள் கொடியை 2 செ.மீ. அளவு இடைவெளிவிட்டு வெட்டியெடுத்து டிஞ்சர், அயோடின் மருந்து கொண்டு தடவி விட வேண்டும். சரியாக மூச்சு விடாத குட்டிகளின் பின்கால்களை மேலே தூக்கி சுற்ற வேண்டும். குட்டிகளுக்கு நிரந்தர அடையாள குறியிடுவது சிறந்த பராமரிப்புக்கு உதவும். வலிமையான சந்ததிக்காக இளம் குட்டிகளை கவனமுடன் பராமரிக்க வேண்டும்.

சீம்பால்

குட்டிகள் பிறந்த 30 நிமிடம் முதல் 45 நிமிடங்களுக்குள் எழுந்து தாயிடம் பால் குடிக்க முயற்சிக்கும். அவைகளால் எழுந்திருக்க முடியவில்லை என்றால் உதவ வேண்டும். சீம்பாலில் சாதாரண பாலை விட ஏழு மடங்கு புரத சத்தும், இரண்டு பங்கு மொத்த திடப்பொருட்களும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது. அது குட்டிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கும்.

ஒவ்வொரு குட்டியையும் தனித்தனியாக கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குட்டிகளின் சிறுகுடல் சுவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை கிரகிப்பதற்கு வசதியாக அமைந்திருக்கும். நேரம் செல்ல செல்ல சிறு குடலின் உட்கிரகிக்கும் திறன் குறைந்துவிடும். எனவே சீம்பாலை குட்டி பிறந்த 15 நிமிடங்களுக்குள் தவறாமல் கொடுக்க வேண்டும். குளிர் காலத்தில் பிறக்கும் குட்டிகளுக்கு குளிரில் இருந்து முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும். பிறந்த 3 நாட்கள் அதன் மீது தனிகவனம் செலுத்துவது அவசியம்.

எடை பார்த்தல்

வளரும் பருவத்தில் குட்டிகளின் எடையை தெரிந்து கொள்வது முக்கியமாகும். ஏனெனில் தீவன அளவை கட்டுப்படுத்திக் கொடுக்கவும், நோய் வருமுன் கண்டறியவும் அது உதவும். மாதம் ஒருமுறை எடையை பார்த்து அதன் வளர்ச்சியை கவனித்து வர வேண்டும். மார்பு சுற்றளவு அதிகம் உள்ள ஆடுகள் அதிக எடையுடன் இருக்கும். முக்கியமாக ஒரு கிலோ உடல் எடை அதிகரிப்பதற்கு எவ்வளவு தீவனம் செலவாகின்றது என்பதை தெரிந்து கொள்வதும் நல்லது.

கொம்பு நீக்கம்

நீளமாக வளரும் கொம்புகளால் மற்ற ஆடு களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மின்சார உபகரணம் அல்லது காஸ்டிக் சோடா கொண்டு கொம்பு நீக்கம் செய்யலாம். குட்டிகளுக்கு 3 முதல் 6 நாட்களில் கொம்பு நீக்கம் செய்து விடலாம். இதனால் பண்ணையில் உள்ள ஆடுகள் ஒரே சீரான தோற்றம் கொண்டிருக்கும்.

குளம்பு நீக்கம் செய்தல்

ஆடுகளுக்கு குளம்புகள் நீளமாக வளர்ந்து விட்டால் அவை நொண்டிக் கொண்டே இருக்கும். எனவே அதிகமாக வளர்ந்த குளம்புகளை வெட்டி நீக்க வேண்டும்.

பால் மறக்க செய்தல்

குட்டிகள் பிறந்து 3 வாரம் கடந்ததும் புல் தின்ன கற்றுக்கொள்ளத்தொடங்கும். அவைகளுக்கு புற்களை வெட்டி கொடுக்கலாம். மேலும் 3 மாதத்தில் பால் குடிப்பதை மறக்க செய்து தாயிடமிருந்து பிரித்துவிடலாம். அவை 6,7 மாதங்கள் கூட தாய்ப்பால் குடிக்கலாம். குடிக்கவிட்டால் தாய் ஆடு மறுபடியும் குட்டி ஈனுவதற்கு காலதாமதமாகிவிடும். ஆகவே குட்டிகள் நல்ல வளர்ச்சி அடைந்து விட்டால் மூன்று மாதத்திலேயே தாயிடமிருந்து பிரித்துவிடலாம்.

கிடா பராமரித்தல்

இன புணர்ச்சி இல்லாத நேரங்களில் கிடாக்களுக்கு நல்ல மேய்ச்சல் நிலம் அல்லது தேவையான அளவு பசுந்தீவனம் இருந்தாலே போதுமானதாகும். எடை குறைவாக உள்ள கிடாக்களை தனியாக பிரித்துவிட வேண்டும். வளர்ந்த குளம்புகளை அவ்வப்போது வெட்டி விட வேண்டும். எப்போதுமே கிடாக்களை பெட்டை ஆடு களிடம் இருந்து பிரித்து தனியாகவே பராமரிக்க வேண்டும்.

தாக்கும் நோய்கள்

நுண்மங்கள்(பாக்டீரியா), நச்சுயிரிகள்(வைரஸ்), ஒட்டுண்ணிகள் போன்றவற்றால் ஆடுகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. அவைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று தடுப்பூசி போட வேண்டும். குடற்புழு ஒட்டுண்ணிகளிலிருந்து ஆடுகளை காக்க வேண்டும். இல்லையெனில் பெரும் உயிர் சேதம் ஏற்படக்கூடும். ஆதலால் நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளை ஆரோக்கியமான ஆடுகளிடம் இருந்து பிரித்து வளர்க்க வேண்டும்.

நுண்மங்களால் அடைப்பான், தொண்டை அடைப்பான், துள்ளுமாரி நோய், வீச்சு நோய், குளம்புப்புண் நோய், ரண ஜன்னி, கோலிபார்ம், சால்மோனல்லா நோய்கள், நிமோனியா நோய்களும், நச்சுயிரிகளால் கோமாரி நோய், பி.பி.ஆர்., ஆட்டம்மை, நீலநாக்கு நோய், வாய்மை நோய் போன்றவைகளும் ஆடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன.

கோமாரி நோய்

இது வேகமாக பரவும் நச்சுயிரி நோயாகும். இந்த நோய் ஆடு களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆடுகளின் வாய், நாக்கு, கால்களில் குளம்புப் பகுதி, மடி போன்ற இடங்களில் கொப்பளம் தோன்றி புண் ஏற்படும். இதனால் ஆடுகளின் வாயில் இருந்து நுரையும், கெட்டியான உமிழ் நீரும் வெளியேறும். அவைகளால் உணவு உட்கொள்ள முடியாது. இந்நோய் வராமல் தடுக்க குட்டிகளுக்கு 8-வது வாரத்தில் கோமாரி நோய் தடுப்பூசியும், 12-வது வாரத்தில் 2-வது முறையாக தடுப்பூசியும், 16-வது வாரத்தில் 3-வது முறையாக தடுப்பூசியும் போட வேண்டும். தொடர்ந்து 6 மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசியை போட வேண்டும்.

(அடுத்த வாரம்: ஒட்டுண்ணி நோய் தாக்குதல், விற்பனை வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்)

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

Next Story