கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலாளி, பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலி


கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலாளி, பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 26 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலாளி, பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை, தேவர் நகரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் தோவாளையில் உள்ள ஒரு கடையில் பூ கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் தோவாளை வடக்கூரை சேர்ந்த பெருமாள் என்கிற விக்கி (25) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று தோவாளையில் இருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை விக்கி ஓட்டி சென்றார். விஷ்ணு பின்னால் அமர்ந்திருந்தார்.

தோவாளை ஆற்றுப்பாலம் திருப்பத்தில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் விஷ்ணு சிக்கினார்.  இதில்  அவர்   தலை நசுங்கி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே படுகாயம் அடைந்த விக்கியை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த விஷ்ணுவுக்கு மோனிஷா என்ற மனைவியும், பிறந்து 41 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. இந்த நிலையில் விஷ்ணு விபத்தில் பரிதாபமாக இறந்துள்ளார்.

அவரது உடலை பார்த்து கைக்குழந்தையுடன் மனைவி கதறி அழுதது காண்பவர் நெஞ்சை கரைக்கும் வண்ணம் இருந்தது.


Next Story