மணலி குடோனில் இருந்து ரூ.7 லட்சம் கோதுமை மூட்டைகள் கடத்த முயற்சி, 5 பேர் கைது


மணலி குடோனில் இருந்து ரூ.7 லட்சம் கோதுமை மூட்டைகள் கடத்த முயற்சி, 5 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

மணலி குடோனில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள கோதுமை மூட்டைகளை கடத்திச்செல்ல முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர்,

மணலியை அடுத்த அரியலூரில் தனியார் கோதுமை குடோன் உள்ளது. இங்கு மேலாளராக லட்சுமணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரி காளிதாஸ் என்பவர் கோதுமை மூட்டைகள் பற்றி பேச்சு கொடுத்தார். பின்னர் குடோனில் இருந்து கோதுமை மூட்டைகளை கடத்த உதவுமாறும், இதற்கு கமிஷன் தொகை தருவதாகவும் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் இதுபற்றி குடோன் உரிமையாளரிடம் கூறினார். இதையடுத்து கோதுமை கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி லட்சுமணன், கோதுமை மூட்டைகளை ஏற்ற வருமாறு காளிதாசிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து காளிதாஸ் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் 2 லாரிகளில் குடோனுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். இதுகுறித்து மணலி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கோதுமை கடத்த முயன்ற காளிதாஸ், சாத்தான்குளத்தை சேர்ந்த சுடலைமுத்து, காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபு, சின்னரசு, மகாதேவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரியுடன் கோதுமை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கோதுமை மூட்டைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

Next Story