ரெயிலில் அடிபட்டு கணவன்-மனைவி பலி


ரெயிலில் அடிபட்டு கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 26 Feb 2018 3:15 AM IST (Updated: 25 Feb 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

உறவினர் இல்ல திருமணத்துக்கு வந்த கணவன்-மனைவி இருவரும் ரெயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியானார்கள்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த கச்சரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சூசைநாதன் (வயது 80), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சரோஜா (72). இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்துக்காக வாலாஜாவுக்கு நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தனர்.

அந்த ரெயில் காலை சுமார் 11 மணி அளவில் வாலாஜாபேட்டை அருகே உள்ள வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் கணவன்-மனைவி இருவரும் ரெயிலில் இருந்து இறங்கினர். ரெயில் சில நிமிடத்தில் புறப்பட்டு சென்றதும் இருவரும் சாலைக்கு வருவதற்காக மற்றொரு தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த வழியாக சென்னையிலிருந்து காட்பாடி நோக்கி செல்லும் ரெயில்கள் வரும்.

அப்போது சரோஜாவின் கால் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. உடனடியாக சூசைநாதன் மனைவியை தூக்கி மீட்க முயன்றார். அதற்குள் சென்னையில் இருந்து மின்னல் வேகத்தில் லக்னோ நோக்கி சென்ற அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் அடிபட்டதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதைப் பார்த்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து லக்னோ செல்லும் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story