திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ விழா


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ விழா
x
தினத்தந்தி 26 Feb 2018 4:00 AM IST (Updated: 26 Feb 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

ஸ்ரீரங்கம்,

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ் கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 11 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிறை, சந்திரபிறை வாகனத்திலும், 3-ம் நாள் பூத மற்றும் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச, கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் மார்ச் 19-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்குனி தேர்த்திருவிழா ஏப்ரல் 1-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து உற்சவங்கள் நடைபெறுகிறது.

ஏப்ரல் 2-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி ஐந்தாம் பிரகாரத்்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 4-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.


Next Story