மாவட்ட செய்திகள்

ஒருதலை காதல் விவகாரத்தில் 3 வாலிபர்களுக்கு அடி-உதை + "||" + 3 young adults in love affair

ஒருதலை காதல் விவகாரத்தில் 3 வாலிபர்களுக்கு அடி-உதை

ஒருதலை காதல் விவகாரத்தில் 3 வாலிபர்களுக்கு அடி-உதை
அரூர் அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் 3 வாலிபர்களுக்கு அடி-உதை விழுந்தது. இதுதொடர்பான விசாரணைக்கு பயந்து அவர்களில் 2 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர்கள் 3 பேர், அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று கேலி-கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.


நான் நினைத்தால் அந்த மாணவியை கடத்தி வருவேன் என பொது இடத்தில் தனது நண்பர்களிடம் அவர் பேசியதாக தெரிகிறது. இதை கவனித்த சிலர் இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் சிலர் அங்கு சென்று 3 வாலிபர்களையும் அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த வாலிபர்கள் தரப்பில் அரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மாணவி தரப்பை சேர்ந்த மோகன் (வயது22), கார்த்தி(25) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் சிலர், மாணவியை கேலி கிண்டல் செய்த 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் தாக்கப்பட்ட வாலிபர்களில் 2 பேர் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் 2 பேருக்கும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரிடையே தகராறை தவிர்க்க வாழைத்தோட்டம் பகுதியில் அரூர் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.