மாவட்ட செய்திகள்

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் + "||" + Devotees Take the milk and take the procession

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
ஈரோடு,

ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் ரோட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.


கடந்த 19-ந் தேதி இரவு கோவிலில் கொடியேற்றப்பட்டது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் நேற்று செய்யப்பட்டது. இதற்காக பக்தர்கள் அதிகாலையில் கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு சென்றனர். அங்கு பக்தர்கள் புனித நீராடிவிட்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்த ஊர்வலம் காவிரி ரோடு, ஆர்.கே.வி. ரோடு, நேதாஜி ரோடு, மரப்பாலம் வழியாக கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் பலர் மேளதாளம் முழங்க நடனம் ஆடியபடி சென்றனர். மேலும், சில பக்தர்கள் அம்மன், காவல் தெய்வம் வேடங்களை அணிந்தபடியும் நடந்து வந்தனர்.

ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு அக்னி கபாலம் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு குண்டம் விழாவும், இதைத்தொடர்ந்து பொங்கல் விழாவும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பத்ரகாளியம்மனின் திருவீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக நிற்பதற்காக கோவிலுக்கு அருகில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.