டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் முதியவர் பலி 3 பேர் படுகாயம்


டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் முதியவர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Feb 2018 3:45 AM IST (Updated: 26 Feb 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

விராலிமலை,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 80). இவரது மனைவி சிவபாக்கியம் (70). உறவினர் அமுதா (55) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் அருப்புக்கோட்டையில் உள்ள தங்களது உறவினரான குமார் என்பவர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஒரு காரில் பரமசிவம், சிவபாக்கியம், குமார் ஆகியோர் விழுப்புரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். காரை குமார் ஓட்டினார். மற்ற 3 பேரும் காரில் அமர்ந்து வந்தனர். இந்நிலையில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையோர தடுப்புக்கட்டையில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர்.

பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரமசிவம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story