மாவட்டத்தில் 8¾ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்


மாவட்டத்தில் 8¾ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
x
தினத்தந்தி 27 Feb 2018 3:00 AM IST (Updated: 26 Feb 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 8¾ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் கடலூரில் கலெக்டர் தண்டபாணி பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார்.

கடலூர்,

தேசிய குடற்புழு நீக்கம் திட்டத்தின் கீழ் ஒரு வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி மாணவர்களுக்கு குடர்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஹபீசா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் பாஸ்கரன், கவிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கடலூர் பெருநகராட்சி ஆணையர் சரவணன் வரவேற்று பேசினார். முடிவில் நகர்நல அலுவலர் டாக்டர் எழில்மதனா நன்றி கூறினார்.

திறந்த வெளிபகுதியை கழிப்பறையாக பயன்படுத்தும்போது அதில் மொய்க்கும் ஈக்கள் உணவு மற்றும் தண்ணீரில் வந்து அமரும். பின்னர் அந்த உணவை சாப்பிடுவதாலும், குடிநீரை குடிப்பதாலும் அதன் வழியாக புழுக்கள் வயிற்றுக்குள் சென்று வளர்ச்சி அடைகின்றன.

எனவே சுத்தமான குடிநீரை பருகிட வேண்டும். மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உணவை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும், காலனிகளை அணிய வேண்டும், திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த கூடாது, கழிப்பறையை பயன்படுத்திட வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுவது அவசியமான ஒன்றாகும்.

மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இன்று (அதாவது நேற்று) ஒரே நாளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதில் கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள 69 பள்ளிகளில் படிக்கும் 49 ஆயிரத்து 729 மாணவ-மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 1-ந் தேதி வழங்கப்படும். இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் எந்த வித பின் விளைவுகளும் ஏற்படாது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு ரத்தசோகை, ஊட்டசத்து குறைவு மற்றும் வளர்ச்சி குறைவு போன்ற குறைபாடுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Next Story