மதுரவாயலில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மதுரவாயலில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2018 3:45 AM IST (Updated: 26 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

மதுரவாயலில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

மதுரவாயல், சீமாத்தம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 26). பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் கார்த்திக்குக்கு பெண் பார்க்க உறவினர்கள் சென்றனர். அப்போது பெண் வீட்டார், கார்த்திக்குக்கு சொந்த வீடு உள்ளதா? என்று கேட்டனர்.

சொந்த வீடு இல்லை என்றதும் பின்னர் தகவல் கூறுவதாக பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கார்த்திக் உறவினர்கள் வீட்டுக்கு திரும்பினர். பின்னர் இரவில் கார்த்திக் வீட்டுக்கு வந்ததும், அவரிடம் பெண் வீட்டார் கூறியதை தெரிவித்தனர்.

இதைக்கேட்டதும் கார்த்திக் தனது அறைக்குள் சென்றுவிட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் அவருடைய தாய் சந்தேகம் அடைந்தார்.

இதனால் அவர் கார்த்திக்கின் அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு கார்த்திக் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதை கண்ட அதிர்ச்சியில் அவருடைய தாய் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கார்த்திக்கை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ள தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

கார்த்திக்குக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு பெண் பார்த்து வந்து உள்ளனர். ஆனால் அவருக்கு சரியாக வரன் அமையவில்லை. இதனால் கார்த்திக் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்து உள்ளார்.

மேலும், தற்போது பார்த்த பெண் வீட்டாரும் கார்த்திக்குக்கு சொந்த வீடு இல்லை என்றதும் பின்னர் தகவல் சொல்வதாக கூறிவிட்டனர். எனவே இந்த வரனும் தனக்கு அமையப்போவதில்லை என்ற விரக்தியில் கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இவ்வாறு போலீசார் கூறினார்.

இருப்பினும் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story