ஒரு வாரத்துக்கு மேல் மனுக்கள் நிலுவையில் இருக்கக்கூடாது அதிகாரிகளுக்கு, கலெக்டர் அதிரடி உத்தரவு


ஒரு வாரத்துக்கு மேல் மனுக்கள் நிலுவையில் இருக்கக்கூடாது அதிகாரிகளுக்கு, கலெக்டர் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2018 10:00 PM GMT (Updated: 26 Feb 2018 5:41 PM GMT)

மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், ஒரு வாரத்துக்கு மேல் மனுக்கள் நிலுவையில் இருக்கக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் அதிரடி உத்தரவிட்டார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், புதிதாக மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பல்லவி பல்தேவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மனு கொடுக்க வந்த ஒவ்வொருவரிடமும் கோரிக்கையை கலெக்டர் கேட்டறிந்தார். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய தீர்வு காண அறிவுறுத்தினார். கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசும் போது கூறியதாவது:-

மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இங்கு வருகிறார்கள். எனவே மக்களின் பிரச்சினைகள், நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனுக்களை நிலுவையில் போடக்கூடாது.

ஒரு வார காலத்துக்குள் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் எந்த மனுக்களும் ஒரு வாரத்துக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடாது. மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு 2 விசயங்கள் தான் செய்ய முடியும். ஒன்று ஏற்றுக் கொண்டு தீர்வு காண்பது. மற்றொன்று நிராகரிப்பது. இதற்கு அதிக நாட்கள் தேவைப்படாது. எனவே, அடுத்த வாரம் எந்த மனுக்களும் நிலுவையில் இருக்கக்கூடாது.

மனுக்களின் தன்மையை ஆராய்ந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும். நிராகரிக்கப்படும் மனுக்களுக்கு நிராகரித்ததற்கான காரணம் குறிப்பிட்டு அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்களையும் நிலுவையில் வைக்காமல், உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

Next Story