முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்யக்கோரி மண்டை ஓடு, எலும்பு துண்டுகளுடன் இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்யக்கோரி மண்டை ஓடு, எலும்பு துண்டுகளுடன் இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2018 10:00 PM GMT (Updated: 26 Feb 2018 5:49 PM GMT)

முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்ய வலியுறுத்தி மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகளுடன் இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மனு அளிக்க இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் வந்தனர். அவர்கள் கையில் மனித மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகளுடன் வந்திருந்தனர்.

பின்னர் அவர்கள், தொண்டு நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை தாங்கினார். நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

அவர்களோடு நின்று போலீசார் சிலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆர்ப்பாட்டத்தை முடித்த இந்து எழுச்சி முன்னணியினர், கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். அவர்களை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியப்பன் அழைத்து சென்றார்.

குறைதீர்க்கும் கூட்டம் நடந்த கூட்டரங்குக்குள் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் முனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மனு அளிக்க வந்த தகவலை தெரிவித்தார். அப்போது அவர், ‘ஆர்ப்பாட்டத்துக்கு நீங்கள் (போலீஸ் துறை) அனுமதி கொடுத்துள்ளர்களா?’ என்று கேட்டார். அதற்கு அவர், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

உடனே, ‘அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்றால், எப்படி கலெக்டர் அலுவலகத்துக்குள் வர முடியும். மனு கொடுப்பதாக இருந்தால் முறையாக பதிவு செய்து கொடுக்க சொல்லுங்கள்’ என்று கண்டித்ததோடு, அறிவுரையும் கூறினார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மனு கொடுக்க சுமார் ½ மணி நேரம் வெளியே காத்திருந்தனர். பின்னர், அவர்கள் நேரடியாக கூட்டரங்குக்குள் சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து தாங்கள் காத்திருப்பதாக முறையிட்டனர். மனுவை வாங்கிக் கொண்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கோரிக்கைகளை கேட்டார்.

அப்போது அவர்கள், ‘காஞ்சீபுரம் தாலுகா, திருமுக்கூடல் அருகே ஆதரவற்றோர் காப்பகத்தில் முதியோர்களை மர்மமான முறையில் கொலை செய்து எலும்புகளை எடுத்து விற்பனை செய்துள்ளதாக அறிகிறோம். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்களில் ஆய்வு நடத்தி, போலி தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். அத்துடன், ‘மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கும் போது, மனுக்களை பதிவு செய்து கொடுத்தால் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து, மனுதாரர்களுக்கு பதில் கொடுக்க முடியும்’ என்று அறிவுரை வழங்கினார்.

மனித மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story