கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகை


கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 27 Feb 2018 3:45 AM IST (Updated: 27 Feb 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த 22-ந்தேதி இரவு முதல் கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்களை மறித்து கேரளா ஜனதா தள கட்சியினர் மற்றும் கேரள விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தி விட்டு, ஆழியாறு அணைக்கு திறந்து விட்டனர். இதற்கிடையில் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் திருமூர்த்தி அணையில் முதலாம் மண்டலத்தில் 2-ம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பது கேள்விகுறியாகி உள்ளது. இந்த நிலையில் கேரளாவுக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்த கோரி அனைத்து கட்சியினர் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம், ஒருங்கிணைப்பாளர் நாகராசன், தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த 4 நாட்களாக கேரள எல்லையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டு உள்ள தமிழக வியாபாரிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தர வேண்டும். கேரள ஜனதா தள கட்சியினர் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக நடத்திய போராட்டத்திற்கு பணிந்து தமிழக அரசு ஆழியாறு அணையில் இருந்து ஒப்பந்தத்திற்கு விரோதமாக தண்ணீர் திறந்து விட்டு உள்ளதை ஏற்று கொள்ள முடியாது. இது பி.ஏ.பி. ஒப்பந்தத்திற்கு எதிரான செயலாகும். மேலும் பி.ஏ.பி. பாசன விவசாயிகளையும், குடிநீருக்காக ஆழியாறு அணையை நம்பி உள்ள கோவை, திருப்பூர் மாவட்ட மக்களையும் நேரடியாக வஞ்சிக்கிற செயலாகும்.

எனவே இந்த தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். பி.ஏ.பி. திட்டத்தில் தொடரும் தண்ணீர் சிக்கலுக்கு நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் ஆனைமலையாறு-நல்லாறு அணை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கு வசதியாக இடைமலையாறு அணை கட்டுமானம் குறித்து முழுமையான உண்மைகளை வெளிக்கொண்டு வர தமிழக அரசு சார்பில் விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சிகள் கொண்ட ஆய்வு குழுவை அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரளாவுக்கு வழங்கும் தண்ணீரை நிறுத்தவில்லை என்றால் நாளை (புதன்கிழமை) பி.ஏ.பி. அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story