கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல்


கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை,

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் பணி நிரந்தரத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இருவரும் ஜாமீன் கேட்டு கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 8-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 22-ந்தேதி மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கணபதி மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘இந்த வழக்கு எனக்கு எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கு ஆகும். நான் யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை. கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் என்னை காவலில் எடுத்து விசாரித்து விட்டனர். அந்த விசாரணையில் எனக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த ஐகோர்ட்டு விதிக்கும் எந்த ஒரு நிபந்தனையையும் ஏற்கத்தயாராக உள்ளேன்’ என்று கூறியுள்ளார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. 

Next Story