பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்


பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்
x
தினத்தந்தி 27 Feb 2018 3:00 AM IST (Updated: 27 Feb 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற கோரி பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

1996-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக நான் இருந்தபோது பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதன் பிறகு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது இந்த மசோதாவுக்கு கடந்த 2002-ம் ஆண்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் இதற்காக பாடுபட்டார். நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக முழு முயற்சி எடுத்தும் இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற முடியவில்லை. சில அரசியல் கட்சிகள் இதை எதிர்த்து வருகின்றன. அதனால் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு 21 ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றி சட்ட வடிவம் கொடுக்க முடியவில்லை.

ஒரு அரசியல் கட்சியாக பெண்களுக்கு சமூக, பொருளாதாரம், அரசியலில் நீதி கிடைக்க எங்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. பெண்களின் உரிமை மனிதர்களின் உரிமை என்று நாங்கள் கருதுகிறோம். 1995-ம் ஆண்டு கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினேன். அரசு வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தேன்.

பெண்கள் விஷயத்தில் நமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதனால் தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு நாட்டின் நலன் கருதி பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Next Story