சண்டிகர் மருத்துவக்கல்லூரியில் முதுகலைப்படிப்பு படித்த ராமேசுவரம் மாணவர் மர்மச்சாவு


சண்டிகர் மருத்துவக்கல்லூரியில் முதுகலைப்படிப்பு படித்த ராமேசுவரம் மாணவர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 27 Feb 2018 5:00 AM IST (Updated: 27 Feb 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

சண்டிகர் மருத்துவக்கல்லூரியில் மேல்படிப்பு படித்த ராமேசுவரத்தை சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவில் குருக்கள் ராமசாமி (வயது 55). இவருடைய மனைவி புவனேசுவரி. இவர்களுடைய மகள் பவதாரணி; மகன் கிருஷ்ணபிரசாத் (24).

கிருஷ்ணபிரசாத் ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் மேல்நிலைக்கல்வியை நாமக்கல்லில் படித்தார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்தார். பின்னர் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சிபெற்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சண்டிகரில் உள்ள மத்திய அரசு மருத்துவக் கல்லூரியான பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பொது மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணபிரசாத் இறந்து விட்டதாக சண்டிகர் கல்லூரியில் இருந்து ராமேசுவரத்தில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சண்டிகர் விரைந்து சென்றுள்ளனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்ற விவரம் தெரியவில்லை.

இந்நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், நீதி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணபிரசாத் இறந்தது குறித்து அவருடன் பள்ளியில் படித்த ராமேசுவரம் நண்பர்கள் அரவிந்த், வருண்குமார், கவுதம் ஆகியோர் கூறியதாவது:-

பள்ளியில் படிக்கும்போதே டாக்டருக்கு தான் படிப்பேன் என்ற குறிக்கோளுடன் கிருஷ்ணபிரசாத் கடினமாக படித்தார். முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வந்த நிலையில் அவருடைய உயிரிழப்பு அதிர்ச்சியாக உள்ளது. தைரியமானவர், அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவரின் சித்தப்பா குமார் கூறியதாவது:-

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரசாத் போனில் பேசினார். அப்போது இந்தி மொழி கடினமாக உள்ளது என்று மனக்குழப்பத்துடன் பேசினார். இந்நிலையில் அவர், உயிரிழந்ததாக வந்த தகவல் அறிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story